குடும்ப வன்செயல்கள், இணையம் வழியான தீவிரவாத மனப்போக்கு மிரட்டல் போன்ற பிரச்சினைகளைச் சமாளிக்க மேலும் பலவற்றைச் செய்ய முடியும் என்று உள்துறை துணை அமைச்சர் ஃபைசால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் அரசாங்கம் மட்டும் அத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுவிட முடியாது என்று தேசிய வளர்ச்சி துணை அமைச்சருமான அவர் கூறினார்.
சிங்கப்பூர் இஸ்லாமிய கல்விமான்கள் மற்றும் சமய ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்த மாநாட்டில் உரையாற்றிய அவர், இத்தகைய பிரச்சினைகளைச் சமாளிக்க எல்லாரும் சேர்ந்து பாடுபட வேண்டி இருக்கிறது என்றார்.
சமூகத் தலைவர்கள், சமயத் தலைவர்கள் ஆகியோருடன் சேர்ந்து பாடுபட்டு மேலும் பலவற்றைச் செய்ய முடியும் என்று தான் கருதுவதாக இணைப் பேராசிரியர் ஃபைசால் கூறினார்.
அத்தகைய பிரச்சினைகள் பற்றி மேலும் கலந்துரையாடல்கள் நடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். சமூகத்திடம் இருந்து தகவல்களைத் திரட்டும்படியும் அதிகளவில் சமூகத்தினரை ஈடுபடுத்தும்படியும் சமூகத் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இப்படிச் செய்தால் மட்டுமே நாம் நம்மை எதிர்நோக்கி இருக்கும் சவால்களை உண்மையிலேயே சமாளிக்க முடியும் என்றார் அவர்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு சென்ற மாதம் 24 மணிநேர தேசிய தொலைபேசி எண் உதவிச் சேவை ஒன்றைத் தொடங்கியது. அதன் மூலம் பொதுமக்கள் குடும்ப வன்செயல்கள் பற்றியும் இதர கொடுமைகள் குறித்தும் தெரியப்படுத்தலாம் என்பதை அமைச்சர் நினைவூட்டினார்.
இணைய தீவிரவாத மனப்போக்கு மிரட்டல் பற்றி கருத்துரைத்த அவர், அமைதியை நிலைநாட்டி வர தன்னுடைய முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை சிங்கப்பூருக்கு இருந்திருப்பதாகக் கூறினார்.
அரசு, கடந்த ஜனவரியில் 16 வயது பதின்ம வயது இளைஞரை யும் இந்த மாதத் தொடக்கத்தில் 20 வயது இளைஞர் ஒருவரையும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது.
சிங்கப்பூரில் சமயங்களுக்கு இடையே நல்ல நட்புறவும் நம்பிக்கையும் நிலவுகிறது. நம் இளையர்களை ஈடுபடுத்தி நல்ல உறவை பேணி வளர்க்க தொடர்ந்து ஒன்றாக நாம் பாடுபட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

