இந்து இளங்கோவன்
'முரசு பிஸ்ட்ரோ', தமிழ் முரசின் புதிய இணையக் காணொளி தொடர்.
இந்திய இளையர்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளைப் பற்றியும் அவர்களது வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களைப் பற்றியும் மிக யதார்த்தமான பாணியில் பேசும் ஒரு நிகழ்ச்சியாக இந்தக் காணொளித் தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாகத்திலும் வெவ்வேறு தலைப்புகளைப் பற்றி பேச அந்தந்த துறையைச் சேர்ந்த இருவர் கலந்துரையாடலில் பங்குபெறுவர்.
கலை, மானுடவியல் துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொண்ட அல்லது மேற்கொண்டு வரும் மாணவர்கள் எதிர்நோக்கக்கூடிய சவால்களைப் பற்றிய ஒரு முக்கிய கலந்துரையாடல் இத்தொடரின் முதல் பாகத்தில் இடம்பெற்றது.
அந்த உரையாடலில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறையில் பட்டம் பெற்ற ஹரிணி, 'லசால்' கலைக் கல்லூரியில் இசை கற்கும் கார்ல் ஆகிய இளையர்கள் இருவர் கலந்துகொண்டனர்.
"இசைத் துறையில் எதிர்காலம் இல்லை, அதிக வருமானம் ஈட்ட முடியாது என்றெல்லாம் என்னைச் சுற்றி இருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், என்னை பொறுத்தவரை எந்தத் துறையாக இருந்தாலும் அது உங்களுக்குப் பிடித்த துறையாக இருக்க வேண்டும்.
"முக்கியமாக, தொடர்ந்து கடினமாக உழைக்க ஊக்கம் தரும் தொழிலாக இருந்தால்தான் வெற்றியடைய முடியும். சட்டத்துறையிலோ இசைத் துறையிலோ கடினமாக உழைத்து திறனை வளர்த்துக்கொண்டு, காலத்திற்கேற்ப தங்களை மேம்படுத்திக்கொள்பவர்களே வாழ்க்கையில் முன்னேற்றம் காண்கிறார்கள்.
"பிடித்த துறையாக இருந்தாலும் அதையும் ஒரு தொழில் ரீதியான கண்ணோட்டத்தில் பார்க்கும் திறனும் அவசியம்.
"கலைத் துறையில் மானியங்களுக்கு விண்ணப்பிப்பது, உங்களையே விளம்பரப்படுத்திக்கொள்வது, உங்களது நண்பர் வட்டத்தை விரிவுபடுத்துவது ஆகியவை இதில் அடங்கும்," என்று உரையாடலில் கார்ல் விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து இந்த வாரம் இரண்டாம் பாகமாக 'இந்திய சமூகத்தில் மனநலம்' என்னும் தலைப்பில் கலந்துரையாடல் காணொளி ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் 'மெண்டல் ஆக்ட்' என்னும் அமைப்பின் நிறுவனர்கள் தேவன், ப்ரியனிஷா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
தங்களது பிள்ளைகள் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்னைகளை இந்திய பெற்றோர் ஏன் புறக்கணிக்கின்றனர் என்பது பற்றியும் மனநலப் பிரச்சினைகள் உடைய இளையர்களை எவ்வாறு அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவலாம் என்பது பற்றியும் பங்கேற்பாளர்கள் பேசினர்.
"சிங்கப்பூரில் இந்திய சமூகம் மனநலப் பிரச்சினைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேச தயக்கம் காட்டுகிறது. மனநலப் பிரச்சினைகள் என்று கூறும்பொழுது அது அவமானத்திற்குரிய ஒரு விஷயம் என்ற கண்ணோட்டத்திலேயே பலரும் பார்க்கின்றனர்.
"மனநலப் பிரச்சினை உடைய ஒருவரை 'பைத்தியம்' என்று திரைப்படங்களில் அழைப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம். இதுபோல மனநலப் பிரச்சினைகளைப் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு பல முட்டுக்கட்டைகள் உள்ளன.
"இத்தகைய மனப்போக்கை மாற்ற இதுபோன்ற கலந்துரை
யாடல் நிகழ்ச்சிகளைத் தொடங்கினால் மட்டுமே உதவி தேவைப்படுவோர் முன்வருவர்," என்றார் ப்ரியனிஷா.
எதிர்வரும் வாரங்களில் இளையர்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய முக்கியமான தலைப்புகளைப் பற்றி பேச நிகழ்ச்சியில் இளையர்கள் பலர் கலந்துகொள்வர்.
தற்போதைய நிச்சயமற்ற பொருளியல் சூழலில் கடினமாகி உள்ள வேலை தேடல், சிங்கப்பூரில் வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் சவால்கள், தமிழர் அடையாளத்தை அரவணைப்பதில் இன்றைய இளையர்களின் மாறிவரும் மனப்பான்மை, சுற்றுச்சூழல் பற்றிய சிங்கப்பூரர்களின் மெத்தனப்போக்கு உள்ளிட்ட பல தலைப்புகளில் 'முரசு பிஸ்ட்ரோ' தொடரில் காணொளிகள் வெளியிடப்பட உள்ளன.

