ஒற்றைத் தாயார் ஒருவருக்கும் அவரது இரண்டு மகன்களுக்கும் தமது ஓரறை வீட்டில் தஞ்சம் அளித்த ஆடவர் அந்த இரு சிறுவர்களையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதை ஒப்புக்கொண்டார்.
அந்தப் பெண்ணும் அவரது மகன்களும் 32 வயது ஆடவரின் வீட்டில் இரண்டு மாதங்களுக்குத் தங்கினர்.
2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இரு சிறுவர்களையும் அந்த ஆடவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
சிறுவர்களின் அடையாளத்தைக் காக்க அவர்களின் தாயாரின் பெயரையும் அவர்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆடவரின் பெயரையும் வெளியிடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சொந்த வீட்டில் குடிபுகுந்ததை அடுத்து நடந்ததைப் பற்றி தங்கள் தாயாரிடம் சிறுவர்கள் மனந்திறந்தனர்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவருக்கு குறைந்தபட்சம் 19 ஆண்டு சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்க வேண்டும் என அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் 13ஆம் தேதியன்று தீர்ப்பு அளிக்கப்படும்.

