தமது வேலையைப் பற்றி அதிகாரிகளிடம் பொய் சொல்லி கொவிட்-19 நிவாரண நிதிகளைப் பெற்றுக்கொண்ட ஆடவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஏமாற்றி $500 பெற்றுக்கொண்ட 37 வயது முகம்மது ஃபைசால் காலித், அமைச்சை மீண்டும் ஏமாற்ற முயன்றார்.
தம்மீது சுமத்தப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
கொவிட்-19 நிவாரண நிதிகளை ஏமாற்றிப் பெறுபவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்பதை வலியுறுத்த ஃபைசாலுக்குக் கடுமையான தண்டனை விதிக்கபட்டதாக மாவட்ட நீதிபதி ஜெஸ்விந்தர் கோர் கூறினார்.
2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து ஃபைசால் தாமாகவே விலகியதாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.
குற்றங்களைப் புரிந்தபோது அவர் வேலை இல்லாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக வேலை இழந்ததாக பொய் கூறி தற்காலிக நிவாரண நிதிக்கு அவர் விண்ணப்பித்தார்.
தாம் வேலை பார்த்த நிறுவனத்தின் சின்னம், இயக்குநர்களின் மின்னிலக்க கையொப்பங்கள் ஆகியவற்றைக் கொண்ட கடிதம் ஒன்றை நகல் எடுத்து அதில் போலி கையெழுத்திட்டு அனுப்பினார்.
அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டு அவருக்கு நிவாரணத் தொகையாக $500 வழங்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஆண்டு மே மாதத்தில் கொவிட்-19 ஆதரவு மானியத்துக்கு அவர் விண்ணப்பித்தார்.
மூன்று மாதங்களுக்கு மேலாக தாம் சம்பளமில்லா விடுப்பில் இருப்பதாக ஃபைசால் அதில் பொய் கூறினார்.
ஆனால் நிறுவனத்தின் சின்னம், இயக்குநர்களின் கையொப்பங்கள் ஆகியவை அடங்கிய கடிதத்தை ஃபைசால் முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக அவரது பழைய நிறுவனத்தின் இயக்குநர் போலிசிடம் புகார் செய்ததை அடுத்து ஃபைசால் புரிந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

