ஹில்வியூவுக்கும் புக்கிட் தீமாவுக்கும் இடைப்பட்ட நான்கு கிலோமீட்டர் தூரம் கொண்ட ரயில் பசுமைப் பாதை புதிய அம்சங்களுடன் மீண்டும் திறப்பட்டுள்ளது.
அங்கு ரயில் கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாப்பதுடன் அந்தப் பகுதிக்கு வருகையாளர்கள் செல்வதற்குரிய வழிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இரு ரயில் பாலங்களுக்கு இடைப்பட்ட இந்தப் பசுமைப் பாதை மத்திய பசுமைப் பாதை என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாதை புதுப்பிப்புப் பணிகளுக்காக 2019 முதல் மூடப்பட்டு இருந்தது.
2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ரயில் பசுமைப் பாதை நண்பர்கள் சமூகக் குழுவுடன் நேற்றுக் காலை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அந்தப் பாதையில் நடந்து சென்றார்.
சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் முன்னைய ரயில் பாதை, 2011லிருந்து செயல்பாட்டை நிறுத்திக்கொண்ட பிறகு அது பசு மைப் பாதையாக மாற்றப்பட்டது.
"இந்தப் பசுமைப் பாதையில் என்னென்ன புதிய அம்சங்கள் சேர்க்கப்படலாம் என்று சிங்கப்பூரர்கள் கூடிய கருத்துகள் சம்பந்தப்பட்ட அமைப்புகளால் கருத்தில் கொள்ளப்பட்டு, திட்டங்கள் வகுக்கக்கப்பட்டன," என்று முன்பு ஒளிப்பதிவு செய்யப்பட்ட காணொளி உரையில் அமைச்சர் லீ கூறினார்.
"பசுமைப் பாதையின் ரயில் மரபுடைமை அம்சங்கள் கட்டிக்காக்கப்பட்டன. அதில் நான்கு பாலங்களைச் செப்பணிட்டு, புதுப்பிக்கும் பணியும் அடங்கும்.
"இரண்டாவதாக, பாதை நெடுகிலும் உள்ள பல்லுயிர் மற்றும் பசுமை அம்சங்கள் மேம்படுத்தப்பட்டன. பாதை நெடுகிலும் பழமையான செடிகள் நடப்பட்டன. அங்கு விலங்களுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்க, அதிக வெளிச்சம் இல்லாத விளக்குகள் பொருத்தப்பட்டன.
"பசுமைப் பாதையைப் பயன்படுத்தும் குடியிருப்பாளர்கள், வருகையாளர்களின் வசதிக்காக இன்னும் அதிகமான நுழைவு வழிகள் அமைக்கப்பட்டன," என்று அமைச்சர் விளக்கினார்.
"மொத்தம் 24 கிலோமீட்டர் தூரம் கொண்ட முழு பசுமைப் பாதையின் இயற்கை, மரபுடைமை, மேம்பாடு ஆகிய மூன்று அம்சங்களிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
"இயற்கைக்கும் பொழுதுபோக்குக்கும் இடத்தை ஒதுக்குவது போக, அங்குள்ள வரலாற்று உள்கட்டமைப்பு பாதுகாக்கப்பட்டது. பசுமைப் பாதையின் நெடுகிலும் உள்ள நிலங்கள் வீடுகள், வேலைகள், வசதிகள் உருவாக்கத்துக்கான எதிர்கால மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும்," என்றும் திரு லீ விவரித்தார்.
பசுமைப் பாதையில் உள்ள மேம்பாடுகளைத் தவிர, பாதசாரிகள் பயன்படுத்தக்கூடிய புதிய சுரங்க நடைபாதையும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது என்று நகர மறுசீரமைப்பு ஆணையமும் தேசிய பூங்காக் கழகமும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
பழைய ரயில் பாலத்துக்குக் கீழ் அமைந்துள்ள 3.6 மீட்டர் குறுக்களவு கொண்ட சுரங்க நடைபாதை, ஹின்டிட் ரோட்டுக்குப் பக்கத்தில் அமைக்கப்பட்டது.
அதன் மூலம் புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதியைப் பயன்படுத்தும் பாதசாரிகள் அந்தச் சாலையைப் பயன்படுத்தாமல் சுரங்க நடைபாதையைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும்.

