அதிர்ச்சி தரக்கூடிய சம்பவங்களால் பிள்ளைகள் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் அனுமதிப்படுவது 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு 30% அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பிள்ளைகள், சாலைப் போக்குவரத்து விபத்துகள், பாலியல் தொல்லைகள், துன்புறுத்துதல், குடும்ப வன்முறை, அன்புக்குரியவர்களை இழப்பது என அதிர்ச்சி தரக்கூடிய பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புள்ளவர்களாக இருக்கக்கூடும்.
இதனை எதிர்கொள்ள முறை யான ஆதரவு இல்லை என்றால், இத்தகைய அதிர்ச்சி பிள்ளைகளை எதிர்காலத்தில் மனநலச் சுகாதாரப் பாதிப்புக்கு இட்டுச் செல்லலாம். கவலை, மன அழுத்தம், பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு போன்ற பிரச்சினைகள் வரக்கூடும் என்று கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் உளவியல் சமூக அதிர்ச்சி ஆதரவு சேவைப் பிரிவின் தலைமை உளவியல் நிபுணர் திருவாட்டி ஜெமி சென் நேற்று கூறினார்.
அவரது பிரிவு மூன்று முதல் 18 வயதுள்ள சிறுமிகள், பெண்கள் ஆகியோருக்கு ஆதரவு அளிக்கிறது.
கொவிட்-19 கொள்ளைநோய், அதிர்ச்சி தரக்கூடிய சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அதிகமான பிள்ளைகள் கேகே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்குக் காரணமாக இருக்கக்கூடுமா என்ற கேள்விக்கு உறுதியாகப் பதிலளிக்க முடியாது சொன்ன திருவாட்டி சென், தனது பிரிவு அண்மையில் குடும்ப வன்முறை போன்ற 'விபத்து அல்லாத காயங்கள்' காரணமாக அதிகமான பிள்ளைகளைக் கையாண்டதைச் சுட்டினார்.
"கொள்ளைநோய் காரணமாக அதிகமானோர் வீட்டிலேயே இருப்பதால், அங்கு மாற்றங்களாலும் மன உளைச்சல்களாலும் பிள்ளைகளுக்கு அதிர்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நிகழக்கூடும்.
"ஆனால், பெரியவர்களைக் கையாளுவதைப் போல சிறுவர்களைக் கையாள முடியாது. அதற்கு முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை தேவை," என்றார் திருவாட்டி சென்.
ஆக அவரது பிரிவினர், வரைதல், விளையாட்டுகள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி அவர்களுக்குள்ள பிரச்சினையை அறிந்துகொள்கின்றனர். பின்னர் அவர்களின் அதிர்ச்சியைப் போக்கும் முயற்சியில் இறங்குகின்றனர்.
உதாரணத்துக்கு, நீர்க்குமிழ்கள் ஊதுதல், அவர்களின் வயிற்றில் விளையாட்டுப் பொருளை வைத்து, அவர்கள் மூச்சை உள்ளிழுத்து விடும்போது அது ஏறி இறங்கும் விளையாட்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.
மேலும், நெருக்கடி நிலை என்றால் என்ன, அதன் மூலம் எப்படிப்பட்ட அனுபவங்களை அவர்கள் பெறக்கூடும் என்பதை விளக்கும் இரு சிறு உயிரோட்டமான காணொளிகளை அப்பிரிவினர் உருவாக்கியுள்ளனர்.
அப்படிப்பட்ட அதிர்ச்சி தரக்கூடிய சம்பவங்களை அனுபவிக்கும்போது எப்படி உதவி நாடலாம் மோன்ற உதவிக் குறிப்புகளையும் அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சொல்லிக்கொடுக்கின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் உளவியல் சமூக அதிர்ச்சி ஆதரவு சேவைப் பிரிவின் மூத்த உளவியல் நிபுணர் திருவாட்டி கோ சின் எர், "நாங்கள் அவர்களுக்குக் காட்டும் காணொளியில் உள்ளூர் உதாரணங்களைப் பயன்படுத்தி, பிள்ளைகளுக்கு விளக்குவோம்.
"பிள்ளைக்கு அதிர்ச்சி தரக்கூடியவை எவை என்பதை பிள்ளைகளின் பராமரிப்பாளர்கள் புரிந்துகொண்டால், அவர்கள் எளிதில் பிள்ளைகளிடம் காணப்படும் மாற்றத்தைக் கண்டு பிடித்துவிடலாம். பிள்ளைகளும் அதற்குரிய சிகிச்சை பெற சம்மதிக்க வாய்ப்புண்டு," என்றார் திருவாட்டி கோ.