சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று உச்சத்தில் இருந்தபோது சொகுசுக் கப்பல் அறைகளில் தங்க வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களில் திரு தமிழும் ஒருவர்.
அப்போது அவருக்குக் கிடைத்த நீண்ட ஓய்வு நேரத்தை தமது பொழுதுபோக்கான பென்சில் ஓவியங்களை வரைவதில் செலவிட்டார்.
மரினா பே சொகுசுக் கப்பல் முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் அறையில் தம்முடன் இருந்த நண்பர்கள், அங்குள்ள அறைகலன்கள் போன்றவற்றை வரைந்தார்.
கிருமித்தொற்றுக்கு ஆளாகிய திரு தமிழ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குணமடைந்தவுடன், சொகுசுக் கப்பலில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டார்.
தென்னிந்தியாவைச் சேர்ந்த 20 வயதுகளில் உள்ள திரு தமிழ், 2016லிருந்து சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.
சொகுசுக் கப்பலில் இருந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த 'ஹெல்த்செர்வ்' எனும் அரசு சார்பற்ற அமைப்பின் ஊழியரான திருவாட்டி சுவென் லோ, திரு தமிழின் பென்சில் ஓவியங்களைப் பார்க்க நேர்ந்தது.
நுண்கலைகள் கற்றிருந்த திருவாட்டி லோ, பென்சில் ஓவியங்களில் உள்ள பல்வேறு நுணுக்கங்களை திரு தமிழுக்குச் சொல்லிக் கொடுத்ததுடன் அவர் தொடர்ந்து வரைவதற்கு பென்சில்களும் தாட்களும் பெற்றுத் தந்தார்.
கொவிட்-19 முன்களப் பணியாளர்களைக் கௌரவிக்கும் நோக்கத்தில் ஐயோன் கலைக் காட்சிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் திரு தமிழின் பென்சில் ஓவியங்களும் இடம்பெற்றன.
'நமது காலத்தின் செயல்வீரர்கள்' எனும் தலைப்பு கொண்ட அக்கண்காட்சியில் சிங்கப்பூர் கலைச் சங்கத்தின் ஓவியர்கள், மாணவர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் ஆகியோரின் 200க்கு மேற்பட்ட கலைப்படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
சிங்கப்பூர் கலைச் சங்கமும் தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமமும் ஏற்பாடு செய்த இக்கண்காட்சி இம்மாதம் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது.
கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பிரதான ஓவியம் 1.8 மீட்டர் அகலமும் 3 மீட்டர் நீளமும் கொண்டது. அதை சிங்கப்பூர் கலைச் சங்கத்தின் 18 ஓவியர்கள் உருவாக்கினர்.
அந்த 'அக்ரிலிக்' ஓவியத்தில் கொள்ளைநோயை எதிர்த்து நாடு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தனிப்பட்ட பாதுகாப்பு உடை, சாதனங்களைப் பயன்படுத்திய சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், கொள்ளைநோய் எதிர்ப்பு மையங்களில் ஒன்றான தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம், சமூக பராமரிப்பு வசிப்பிடமாகச் செயல்பட்ட சிங்கப்பூர் எக்ஸ்போ ஆகியவற்றின் படங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஓவியத்தை ஓவியர்கள் வரைந்து முடிக்க ஆறு மாதங்கள் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
கண்காட்சிக்குப் பிறகு இந்தப் பிரதான கலைப்படைப்பு தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்துக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஓவியத்தில் இடம்பெற்றுள்ள தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவின் துணை தலைமை நிர்வாகியான திரு பெஞ்சமின் சீட், "கொள்ளைநோய் காலத்தில் தாதிகள் போன்ற முன்களப் பணியாளர்களின் பங்கு பெரிதும் முக்கியம் வாய்ந்ததாக இருந்தது.
"அவர்களின் முகங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். அவர்களின் பெயர்களை நாம் அறிந்திருக்க மாட்டோம். ஆனால், அவர்கள் நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தனர்.
"இந்த ஓவியம் அவர்களின் பங்களிப்பையும் தியாகத்தையும் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது," என்று கருத்து உரைத்தார்.
கண்காட்சியில் இடம்பெற்ற கலைப்படைப்புகளை சிங்கப்பூர் கலைச் சங்கத்தின் இணையத் தளத்திலும் ஆசிய அறிவியலாளர் சஞ்சிகை மற்றும் ஹெல்த்செவ் ஃபேஸ்புக் பக்கங்களிலும் பார்க்கலாம்.
திரு தமிழ், தமது முதலாவது பென்சில் ஓவியத்தை 'ஃபுரோஸன்' எனும் பிரபல உயிரோவிய திரைப்படத்தில் வரும் 'எல்சா' எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு வரைந்தார். அந்தத் திரைப்படத்தை அவர் இணையத்தில் பார்த்தார்.
தமது உடன்பிறப்புகளின் பிள்ளைகளைக் காணாது ஏங்கும் திரு தமிழ், அவர்களின் உருவப்படங்களையும் பென்சில் ஓவியங்களாக வரைந்துள்ளார்.
இப்போது வேலை செய்ய அலுவலகத்துக்குத் திரும்பியுள்ள அவர், ஓவியம் வரைவதற்கு நேரத்தை ஒதுக்கி அதில் தொடர்ந்து கவனத்தைச் செலுத்துகிறார்.
இந்தக் கண்காட்சிக்கு 20க்கு மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் ஓவியங்கள், பீங்கான் பொருட்கள், மட்பாண்டங்கள் என பல்வேறு கலைப் படைப்புகள் வழங்கினார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

