'தி ஆரஞ்ச் பால்ரூம்' என்ற திருமணக்கூடத்தை 20 நாட்கள் மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு திருமண ஜோடி, 275 பேரை வரவழைத்து மூன்று வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்த அந்தத் திருமணக்கூடம் அனுமதி அளித்ததே இதற்கான காரணம்.
பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக அந்தக் கூடத்திற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கேலாங்கில் உள்ள தஞ்சோங் காத்தோங் காம்ப்ளக்ஸ் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் அமைந்து இருக்கும் அந்தக் கூடத்தை மார்ச் 22 முதல் ஏப்ரல் 10 வரை மூடிவிட வேண்டும்.
சிங்கப்பூர் நில ஆணையம் நேற்று அறிக்கையில் இந்த விவரங்களைத் தெரிவித்தது.
பாதுகாப்பு இடைவெளி தூதர்கள் அந்த இடத்தில் ஜனவரி 30ஆம் தேதி சோதனை நடத்தினர். அங்கு பிற்பகல் 1.30 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் இரண்டு வரவேற்பு விருந்து நிகழ்ச்சிகளை ஒரு திருமண ஜோடி நடத்தியதை அவர்கள் கண்டனர்.
மேலும் புலன்விசாரணை நடத்தப்பட்டது. அன்றைய நாளில் மூன்று வரவேற்பு நிகழ்ச்சிகளில் ஏறத்தாழ 300 விருந்தினர்களை உபசரிக்க ஏற்பாடுகள் அங்கு இடம்பெற்று இருந்தது தெரியவந்தது.
சட்டத்தின்படி, திருமண ஜோடி கள், ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை மட்டும்தான் நடத்த முடியும். அதில் திருமண ஜோடிஉட்பட 100 பேருக்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்ளக் கூடாது.
கொவிட்-19 விதிமுறைகள் மீறப்பட்டு இருக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்க புலன்விசாரணைகள் தொடர்வதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
திருமண ஏற்பாட்டாளர்கள், திருமணக்கூடங்களை நடத்துவோர், தனிப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் அதை கடுமையான ஒன்றாக தான் கருதுவதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்டு இருப்பவர்கள், திருமணத்துக்குத் திட்டமிடும் மணமக்கள் எல்லாரும் விதிமுறைகளை மீறாமல் நடந்துகொண்டு சமூகத்தின் நலனையும் நல்வாழ்வையும் பாதுகாக்க வேண்டும் என்று அந்த ஆணையம் வலியுறுத்திக் கூறி இருக்கிறது.
தி ஆரஞ்ச் பால்ரூம் கூடத்தில் சென்ற ஆண்டில் பலருக்கும் கொவிட்-19 கிருமி தொற்றியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.

