சிங்கப்பூரில் சென்ற ஆண்டில் பேட்டரி சைக்கிள்கள் மற்றும் மின்ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட நாடமாட்டச் சாதனங்கள் காரணமாக மூண்ட தீச் சம்பவங்கள் எண்ணிக்கை 68 என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்தது.
அந்தச் சம்பவங்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவை குடியிருப்பு இடங்களில் நிகழ்ந்து இருக்கின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்தமாக இவை குறைந்து இருக்கின்றன என்றாலும் இத்தகைய சம்பவங்கள் இன்னமும் கவலை தருபவையாக இருக்கின்றன என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
இத்தகைய தீச் சம்பவங்கள் தொடர்பில் அழைப்பு வந்ததை அடுத்து அந்த இடங்களுக்குச் சென்று தற்காப்புப் படை புலன்விசாரணை நடத்தியபோது, விதிமுறைக்கு உட்படாத சாதனங்கள்தான் தீ விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்தது.
சட்டவிரோதமாக மாற்றப்பட்ட சாதனங்களும் பொருத்தமில்லாத மின் இணைப்புச் சாதனங்களும் காரணமாக இருந்ததாக இந்தப் படை தெரிவித்துள்ளது.
சிலர் அசல் பேட்டரிகளுக்குப் பதிலாக வேறு பேட்டரிகளை வாகனங்களில் பொருத்திக்கொள்கிறார்கள். மின் இணைப்பையும் மாற்றுகிறார்கள். பயன்படுத்தப்படாத பேட்டரிகள் பல நாட்களுக்குப் பிறகு கெட்டுப்போய்விடும். காலப்போக்கில் அதனால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று இந்தப் படை தெரிவித்தது.
தனிநபர் நடமாட்டச் சாதனங்களில் சட்டவிரோதமாக மாற்றங்களைச் செய்ய வேண்டாம் என்று இந்தப் படை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
தேவைப்பட்டால் அசல் சாதனங்களை மட்டும் மாற்றி பொருத்திக் கொள்ளும்படியும் அது ஆலோசனை கூறியது. சாதனங்களும் பேட்டரிகளும் குறிப்பிட்ட காலங்களுக்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டும்.
கெட்டுப்போன அல்லது அதிக காலம் பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற சாதனங்களையும் பேட்டரிகளையும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தற்காப்புப் படை வலியுறுத்திக் கூறியது.
அவற்றை நிலப் போக்குவரத்து ஆணையம் பட்டியலிட்டு உள்ள மின்னியல் கழிவுப்பொருள் மறுபுழக்க நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்தப் படை தெரிவித்தது.
சிங்கப்பூர் முழுவதும் உள்ள 80க்கும் மேற்பட்ட இடங்களில் அவற்றை ஒப்படைக்கலாம். அந்த இடங்களை கேஜிஎஸ் என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், பேட்டரி சைக்கிள் மற்றும் பேட்டரியில் செயல்படும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கான புதிய இறக்குமதி கட்டுப்பாடுகள் பற்றி இந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்தார்.
அந்தக் கட்டுப்பாடுகள் இந்த ஆண்டின் முதல்பாதியில் நடப்புக்கு வருகின்றன. பொருத்தமில்லாத சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுப்பது இதன் நோக்கம்.
இத்தகைய தனிநபர் நடமாட்டச் சாதனங்களை அதிகாரிகள் தொடர்ந்து பரிசோதித்து கண்காணித்து வருவார்கள். சட்டவிரோத திருத்தங்கள் இருந்தால் உரிய நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்து இருந்தார்.