சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களையும் சேர்த்து கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 60,208 ஆகியது.
புதிதாக கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அனைவருமே வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள். தனிமையில் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சமூகத்திலும் வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதியிலும் புதிதாக நேற்று யாருக்கும் தொற்று இல்லை.
ஞாயிற்றுக்கிழமையும் புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் நான்கு பேர் இந்தோனீசியாவில் இருந்து கப்பல் மூலம் வந்த கப்பல் ஊழியர்கள் ஆவர்.
தரையிறங்காமலேயே அவர்களுக்குக் கப்பலிலேயே பரிசோதனை நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அந்த 12 பேருக்கும் தனிமை உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து வந்த சிங்கப்பூரரான 23 வயது ஆடவர் ஒருவரும் அந்த 12 பேரில் அடங்குவார். மொத்தத்தில் புதிய சமூகத்தொற்று கடந்த வாரம் பூஜ்ஜியமாகக் குறைந்தது.
ஞாயிற்றுக்கிழமை 16 பேர் குணமடைந்தனர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 60,023 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள். 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதர 110 பேர் சமூக நல்வாழ்வு நிலையங்களில் குணமடைந்து வருகிறார்கள்.
கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரில் 30 பேர் மாண்டுவிட்டனர். தொற்று இருந்தும் இதர காரணங்களால் மாண்டவர்களின் எண்ணிக்கை 15.

