அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் புருணைக்கு அதிகாரத்துவப் பயணம்
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று புருணைக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வலுவான, நீண்டநாள் உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அவரது இந்தப் பயணம் அமைந்தது.
புருணை மன்னர் ஹசனல் போல்கியாவை டாக்டர் பாலகிருஷ்ணன் சந்தித்துப் பேசுவார் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
புருணை வெளியுறவு இரண்டாம் அமைச்சர் எரிவான் பெஹின் யூசோஃப் அளிக்கும் சிறப்பு விருந்துபசரிப்பிலும் டாக்டர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
இந்தப் பயணத்தின் நோக்கத்தைப் பற்றி சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு விவரிக்கவில்லை. எனினும், தற்போது மியன்மார் நிலவரம் பற்றி கலந்தாலோசிக்க தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கக் கோரி இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ கடந்த வாரம் அழைப்பு விடுத்து இருந்தார்.
ஆசியான் எனப்படும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்புக்குத் தற்போது தலைமை வகிக்கிறது புருணை.
அமைச்சர் பாலகிருஷ்ணனுடன் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அதிகாரிகளும் இந்தப் பயணத்தில் உடனிருந்தனர். புருணை பயணத்திற்குப் பிறகு மலேசியாவுக்கும் இந்தோனீசியாவுக்கும் டாக்டர் பாலகிருஷ்ணன் பயணம் மேற்கொள்கிறார்.
இன்றும் நாளையும் டாக்டர் பாலகிருஷ்ணனின் மலேசியப் பயணத்தின்போது மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதின் உசேன் அவரைச் சந்தித்து உபசரிப்பார் என மலேசிய வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளில் ஓர் அங்கமாக டாக்டர் பாலகிருஷ்ணனின் மலேசியப் பயணம் அமையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான விவகாரங்களைப் பற்றி இருநாட்டு கூட்டுறவின் அடிப்படையில் திரு ஹிஷாமுதினும் டாக்டர் பாலகிருஷ்ணனும் கலந்துரையாடுவர். அதுபோக வட்டார, அனைத்துலக விவகாரங்கள் குறித்தும் அவர்கள் பேசுவார்கள்.
மலேசிய பிரதமர் முகைதீன் யாசின், அனைத்துலக வர்த்தக, தொழில் மூத்த அமைச்சர் அஸ்மின் அலி, தற்காப்பு மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க துறை அமைச்சர் கைரி ஜமாலுதின் ஆகிய அமைச்சர்களையும் டாக்டர் பாலகிருஷ்ணன் சந்தித்துப் பேசுவார்.
"சுகாதார அமைச்சின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயல்முறைகளுக்கும் உட்பட்ட முறையில் இந்தச் சந்திப்புகள் நடைபெறும்," என்றும் அறிக்கை தெரிவித்தது.