தங்களது தாயார் 2013ல் மறுமணம் செய்தகொண்டபோது தங்களுக்குத் தந்தை ஸ்தானத்தில் ஒருவர் கிடைத்திருப்பதாக மூன்று சகோதரிகள் எண்ணினர்.
ஆனால், ஓராண்டு கழித்து அவர்களை அந்த ஆடவர் மானபங்கம் செய்யத் தொடங்கினார். அப்போது அந்தச் சகோதரிகள் 11க்கும் 15 வயதுக்கும் இடைப்பட்டிருந்தனர்.
2017ல் அந்தச் சகோதரிகளில் இருவர், தங்களுக்கு நடந்ததை அவ்விருவருக்கும் இடையில் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் மானபங்கம் செய்யப்பட்டது அவர்களது தாயாருக்கும் பின்னர் தெரியவந்தது. எனினும், குடும்ப நலன் கருதி அவர்கள் போலிசிடம் புகார் அளிக்கவில்லை.
2019ல் அத்தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது போலிசிடம் புகார் அளிக்கப்பட்டது. அப்போது அந்த ஆடவரின் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அந்த 53 வயது ஆடவர் மானபங்கம் செய்ததாக அவருக்கு எதிரான குற்றம் நிரூபணமானது. அதையடுத்து அவருக்கு நேற்று ஈராண்டு, எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த ஆடவரின் வயது 50க்கு மேல் இருப்பதால், அவருக்குப் பிரம்படி விதிக்க முடியாது. எனவே, பிரம்படிக்குப் பதிலாக கூடுதலாக அவருக்கு 18 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டது.
பாதிக்கப்பட்ட அந்தச் சகோதரிகளின் அடையாளங்களைப் பாதுகாக்க அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் அந்தச் சகோதரிகளைத் தாம் மானபங்கம் செய்ததாக தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்த ஆடவர் ஏற்க மறுத்தார். அந்தச் சகோதரிகளின் தாயார், மணமுறிவு செய்துகொள்ளும் நடைமுறையில் போலிஸ் வழக்கைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணியதாக அந்த ஆடவர் வழக்கு விசாரணையின்போது கூறினார். தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவர் எண்ணுகிறார். அவருக்கு $20,000 பிணை வழங்கப்பட்டு உள்ளது.