சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகளாக நேற்று முன்தினம் 204 பேர் பொறுப்பேற்றுக்கொண்டதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பதவியேற்புச் சடங்கில் அந்தப் பயிற்சி அதிகாரிகள் சடங்குபூர்வ வாள்களையும் நியமனக் கடிதங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்த அணிவகுப்புச் சடங்கை மேற்பார்வையிடும் அதிகாரியாக கலாசார, சமூக இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் ஆற்றிய உரை, காணொளிப் பதிவாக சடங்கில் காண்பிக்கப்பட்டது.
அதில் பேசிய அவர், கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில் இணையப் பாதுகாப்பு மிரட்டல்கள் உள்ளிட்ட பாதுகாப்புச் சவால்கள் தொடர்ந்து நீடித்து அவை உருமாறியும் வருவதாகச் சொன்னார்.
இணையச் சூழலில் சிலரிடம் தீவிரவாதச் சிந்தனை ஏற்பட்டுள்ளதால் பயங்கரவாத மிரட்டலும் தொடர்ந்து நீடித்து வருவதை அமைச்சர் எட்வின் டோங் சுட்டினார்.
பருவநிலை மாற்றமும் சிங்கப்பூருக்கு மற்றொரு சவாலாக விளங்குவதாகக் கூறிய அவர், 'சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030'ன்கீழ் தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் சுற்றுச்சூழலுக்காக அவற்றின் பங்கை ஆற்றும் என்று தெரிவித்தார்.
"பாதுகாப்புச் சூழல் தொடர்ந்து உருமாறினாலும், சிங்கப்பூரையும் நமது வாழ்வுமுறையையும் தற்காப்பதில் சிங்கப்பூர் ஆயுதப்படையின் குறிக்கோள் மாறாது.
"சிங்கப்பூர் ஆயுதப்படையின் வலிமை நமது அதிநவீன ஆயுதங்களில் மட்டுமல்லாமல் நமது சேவையாளர்களின் வைராக்கியத்திலும் அடங்கியுள்ளது," என்று திரு டோங் கூறினார்.
சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகளின் கடமையும் தொடர்ந்து மாறாமல் இருப்பதை அவர் சுட்டினார்.
முன்னுதாரணமாகத் திகழ்ந்து தேசிய சேவையாளர்களை வழிநடத்துவதும் உயர்தர நிலைக்கு அவர்களுக்குப் பயிற்சியளிப்பதும் அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும் அதிகாரிகளின் கடமைகளில் அடங்கும் என்று சட்ட இரண்டாம் அமைச்சருமான திரு டோங் சொன்னார்.