ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: ஆடவருக்கு
ஐந்து வாரச் சிறை, $276,000 அபராதம்
பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பு செய்த ஆடவருக்கு நேற்று ஐந்து வாரச் சிறைத் தண்டனையும் $275,860 அபராதமும் விதிக்கப்பட்டது.
'மேக்ஸ்டெக் பிளஸ்' நிறுவன இயக்குநரும் 'வாம் இன்டர்நேஷனல்' குழுமத்தின் உரிமையாளருமான ஸாவ் குன், 38, ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக ஐந்து குற்றச்சாட்டுகளையும் ஆவணங்களில் மோசடி செய்ததாகவும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பொய்த் தகவல் அளித்ததாகவும் இம்மாதத் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான அவர், 2016க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் 'மேஸ்டெக்' மற்றும் 'வாம்' நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைக் குறைத்து மதிப்பிட்டார். இதன் மூலம் ஏறத்தாழ $64,200 ஜிஎஸ்டியைச் செலுத்த அவர் தவறினார்.
ஆவணங்களில் மோசடி புரிந்ததோடு பல தருணங்களில் அதிகாரிகளிடம் பொய்த் தகவலையும் ஸாவ் அளித்தார். அதிகாரிகளின் கூடுதல் விசாரணையில் ஸாவ் பொய்யுரைத்ததும் ஆவணங்களில் மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
நான்கு குற்றங்களுக்கு எதிராக வழக்கு விசாரணை கோரும் ஓட்டுநர்
போலிஸ் அதிகாரி ஒருவரை 100 மீட்டருக்கும் மேலாக சாலையில் இழுத்துச்சென்ற 'மெசராட்டி' சொகுசு கார் ஓட்டுநரான லீ செங் யான், (படம்) இச்சம்பவத்துடன் தொடர்பு இல்லாத நான்கு வேறு போக்குவரத்துக் குற்றச்சாட்டுகளை எதிர்த்து வழக்கு விசாரணை கோருகிறார்.
அந்த போலிஸ் அதிகாரி தொடர்பிலான இந்தச் சம்பவம் 2017 நவம்பர் 17ஆம் தேதி நிகழ்ந்தது. இச்சம்பவத்திற்கு முன்னதாக லீ மேற்கூறப்பட்ட அந்தப் போக்குவரத்துக் குற்றங்களைப் புரிந்திருந்தார். அந்தக் குற்றங்களைப் புரிந்த இவருக்கு அனைத்துப் பிரிவு வாகனங்களையும் ஓட்டத் தடை விதிக்கப்பட்டிருந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 2017 நவம்பர் 9, 15 ஆகிய தேதிகளில் லீ காரை ஓட்டினார். தற்போது 37 வயதாகும் லீ விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரது வழக்கு விசாரணை நேற்று தொடங்கவிருந்தது. எனினும், தமது வழக்கறிஞரைப் பொறுப்பிலிருந்து விடுவிக்க லீ விண்ணப்பித்ததைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தம்மைப் பிரதிநிதிக்க வேறொரு வழக்கறிஞரைத் தமது குடும்பத்தார் தொடர்புகொண்டு உள்ளதாகவும் இது தொடர்பான கடிதம் ஒன்றில் அவர்கள் இன்னும் கையெழுத்திடவில்லை என்றும் மாவட்ட நீதிபதி பாலா ரெட்டியிடம் லீ கூறினார்.

