'வலுவாக மீண்டெழுதல்' கலந்துரையாடல்களில் பேசப்பட்ட பல்வேறு கருப்பொருள்களில் முக்கிய விவகாரங்களில் ஒன்றாக சமூகத்தில் அனைவரையும் ஈடுபடுத்துதல் உருவெடுத்துள்ளதாகவும் சிங்கப்பூரர்கள் பரிவுமிக்கவர்கள் என்பதை இது காட்டுவதாகவும் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சுடனான பங்காளித்துவ முயற்சியில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் ஏற்பாடு செய்த 'ஒன்றிணைந்த சிங்கப்பூர் செயற்கூட்டணி' வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இதனைக் கூறினார்.
"இந்தக் கலந்துரையாடல்கள் சிங்கப்பூரர்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன. அதாவது நாம் பரிவுமிக்கவர்கள், குறைபாடுகளைப் பற்றி எடுத்துச் சொல்வதற்கு தயங்குவதில்லை, மற்றவர்களுக்கு உதவ விரும்புதல், சிறந்த ஓர் இடத்தை நிர்மாணிக்க விரும்புவது உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்," என்று அமைச்சர் இந்திராணி விவரித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்தக் கலந்துரையாடல் தொடர், கொவிட்-19 சூழலில் இருந்து மீண்டெழும் சிங்கப்பூருக்கான பாதையை வகுக்க முற்படுகிறது.
கலந்துரையாடல் தொடங்கப்பட்ட ஒன்பது மாதங்களில் 17,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் அவர்களது யோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயுடன் சேர்ந்து அமைச்சர் இந்திராணி இந்தக் கலந்துரையாடல்களை வழிநடத்துகிறார்.
இந்தக் கலந்துரையாடல் தொடர் வெளிக்கொணர்ந்துள்ள விஷயங்களில் ஒன்று பங்காளித்துவ உறவுமுறை, அல்லது செயற்கூட்டணி எனப்படுவது.
"இந்தக் கலந்துரையாடல்களில் ஏராளமான சிங்கப்பூரர்களுடன் நாங்கள் பேசி யோசனைகளைப் பரிமாறிக்கொண்டோம். அதன் பிறகு அவற்றைச் செயல்படுத்த யாராவது முன்வர வேண்டும்.
"எனவே வெவ்வேறு துறைகளில் உள்ளவர்கள் இவை தொடர்பிலான உத்திகளைப் பற்றி யோசித்து அவற்றை அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படுத்த விரும்பினோம்," என்று அமைச்சர் கூறினார்.
கொவிட்-19 சூழலில் இந்தப் பங்காளித்துவ உறவுமுறை உருவெடுத்திருப்பதை நேற்றைய வட்டமேசை கலந்துரையாடலில் பங்கேற்பாளர்கள் சுட்டினர்.

