சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் கனமழையால் திடீர் வெள்ளம்

சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் கனமழையால் திடீர் வெள்ளம்

1 mins read
06f00b08-272b-4c55-b9f2-84d016bea179
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வாகனமோட்டிகளுக்கு உதவ அதன் ஊழியர்கள் விரைந்ததாக பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியது. படம்: பொதுப் பயனீட்டுக் கழகம்/ஃபேஸ்புக் -

சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் இன்று (மார்ச் 23) பிற்பகல் பெய்த கனமழையால் அப்பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள சாலைகள் சிலவற்றில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கியது.

பூன்லே வே, கார்ப்பரேஷன் சாலை, எண்டர்பிரைஸ் சாலை ஆகிய இடங்களில் இன்று மாலை 5.30 மணியளவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வாகனமோட்டிகளுக்கு உதவ அதன் ஊழியர்கள் விரைந்ததாக கழகம் கூறியது.

வெள்ளம் காரணமாக பேருந்துச் சேவை எண் 252 எண்டர்பிரைஸ் சாலையிலிருந்து வேறு பாதைக்கு மாற்றிவிடப்பட்டதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் இன்று மாலை 5.40 மணிக்கு அதன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இதனால் ஒன்பது பேருந்து நிறுத்தங்களில் அப்பேருந்து நிற்கவில்லை.

சிங்கப்பூரில் பல இடங்களில் இன்று மாலை 4.15 மணிக்கும் 4.45 மணிக்கும் இடையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் மாலை 4 மணியளவில் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது.

இன்று மாலை 6 மணியளவில் வெள்ளநீர் பெரும்பாலும் வடிந்துவிட்டது. என்றாலும், இன்று பின்னிரவும் நாளை பிற்பகலிலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வாரியம் முன்னுரைத்துள்ளது.