சிறிதோ, பெரிதோ அனைத்து நிறுவனங்களும் புதுத் திறன்களை வளர்த்துக்கொண்டு கொவிட்-19 சூழலால் உருவாகிய சவால்களை எதிர்கொள்ள புதுப்புது சந்தைகளை நாட வேண்டும் என்றார் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங்.
இதற்கு 'கெப்பல் கார்ப்பரேஷன்' ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டார். ஹார்பர்ஃபரண்ட் அவென்யூவில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமையகத்திற்கு நேற்று சென்றிருந்த திரு சான், நீடித்து நிலைக்கத்தக்க எரிசக்தித் தீர்வுகள், இணைப்பாற்றல், நகர்ப்புறத் தீர்வுகள் போன்ற புதிய வளர்ச்சி அம்சங்களில் கெப்பல் கவனம் செலுத்தவுள்ளதைச் சுட்டினார்.
"இன்று நாம் பார்க்கும் கெப்பல், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கெப்பலிலிருந்து மாறுபட்டது," என்றும் தெரிவித்தார்.
சந்தை மேம்பாடுகள், தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றுடன் ஈடுகொடுக்கும் கெப்பல் நிறுவனத்தைப் போல் செயல்படுமாறு மற்ற நிறுவனங்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.