கொவிட்-19 கொள்ளைநோயிலிருந்து மீண்டுவர, நிறுவனங்கள் தொடர்ந்து சுறுசுறுப்புடன் செயல்படவேண்டும் என்றும் தங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி மதிப்பை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்றும் வர்த்தக தொழில் மற்றும் மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லேங் தெரிவித்துள்ளார்.
தொழில்முனைப்புடன் திகழும் ஆகச் சிறந்த 50 தனியார் உள்ளூர் நிறுவனங்களை அங்கீகரித்த 'எண்டர்பிரைஸ் 50' விருதளிப்பு நிகழ்ச்சியின்போது அவர் இவ்வாறு பேசியிருந்தார்.
நெருக்கடியின் பொருளியல் அதிர்வால் உலகளாவிய பொருளியலின் நிலையற்றத்தன்மை தீவிரமாகி இருப்பதாகவும் தொழில்நுட்ப முன்னேற்றம் துரிதமாகி இருப்பதாகவும் டாக்டர் டான் குறிப்பிட்டார்.
"நம் விநியோக, மதிப்புத் தொடர்களில் திடீர் தடைகள் ஏற்பட்டதால் வாடிக்கையாளர்களின் தேவைகளிலும் மனப்போக்கிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளன. இதனால், நிறுவனங்கள் தங்களின் வர்த்தக முறைகளில் புத்தாக்கத்தைப் புகுத்தவேண்டும்; அவற்றை மாற்றி அமைக்க வேண்டும்; புதுப்பிக்க வேண்டும். அப்போதுதான் தங்களின் மதிப்பை உயர்த்திக்கொள்ள முடியும்," என்று விளக்கினார்.
வாய்ப்புகள் வரும் வரை காத்திருக்காமல் புதிய அம்சங்களில் உள்ள வாய்ப்புகளை முன்கூட்டியே நிறுவனங்கள் தேடிச் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கொள்ளைநோய் தணிந்த பின்னரும் வெவ்வேறு செயல்பாட்டு முறைகளை நிறுவனங்கள் கையாள வேண்டும் என்றார்.
விருது நிகழ்ச்சி 27வது ஆண்டாக நடைபெற்றது. 'தி பிசினஸ் டைம்ஸ்', 'கேபிஎம்ஜி' ஆகியவை இதற்கு இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. 'எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்', சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம், சிங்கப்பூர் பங்குச்சந்தை ஆகியவற்றின் ஆதரவில் நிகழ்ச்சி நடைபெற்றது.
முதல்முறையாக இவ்வாண்டு விருதுகள் நேரலையாக வழங்கப்பட்டன.

