முஸ்லிம் தாதிகள் தங்கள் பணியின்போது 'தூடோங்' எனும் தலையங்கி அணிவதை அனுமதிப்பதில் அரசாங்கம் எடுத்திருக்கும் ஆக்கபூர்வமான போக்கை மூத்த முஸ்லிம் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
இதன் தொடர்பில் அரசாங்கம் பலமுறை மூத்த முஸ்லிம் தலைவர்களுடன் தனிப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடந்த அந்தக் கலந்துரையாடல்களில் அங்கம் வகித்த முஸ்லிம் தலைவர்கள், தனிப்பட்ட கலந்துரையாடல்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அது தொடர்பான வெளிப்படையான கருத்துரைப்பில் தாங்கள் ஈடுபடவில்லை என்று கூறினர்.
அவர்களில் ஒருவரான உஸ்தாஸ் ஹஸ்பி ஹசான், "தலையங்கி தொடர்பான கலந்துரையாடல்கள், அசாடிஸா எனும் முஸ்லிம் சமய ஆசிரியர்கள், சிங்கப்பூர் இஸ்லாமிய கல்விமான்கள் ஆகியோரிடையே நடத்தப்பட்டன. ஆனால் அது தொடர்பான விவரங்களை நாங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
"தனிப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய போக்கை எடுக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஆக அதன் தொடர்பிலான உறுதியான முடிவு தெரியாதபோது நாங்களும் அது பற்றிக் கருத்துரைப்பது சரிஆகாது.
"இன்று அமைச்சர் அது பற்றி வெளிப்படையாகப் பேசிவிட்டார். இனி நாங்கள் இதுபற்றி முஸ்லிம் சமூகத்தினரிடம் பேசலாம்," என்றும் திரு ஹஸ்பி விவரித்தார்.
நேற்று கதிஜா பள்ளிவாசலில் மூத்த முஸ்லிம் தலைவர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடலுக்குப் பிறகு உஸ்தாஸ் ஹஸ்பி செய்தியாளர்களிடம் பேசினார்.
அந்தக் கலந்துரையாடலில் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் ஆகியோரும் பங்கேற்றனர்.
'பெர்காஸ்' எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய கல்விமான்கள் மற்றும் சமய ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவருமான உஸ்தாஸ் ஹஸ்பியுடன் அதே சங்கத்தின் மூத்த தலைவர்கள் உஸ்தாஸ் அலி முகம்மது, உஸ்தாஸ் பசுனி மௌலான் ஆகியோர், "ஆறு மாதங்களுக்கு முன்பே அமைச்சர் சண்முகம், தாதிகள் தங்கள் பணியின்போது தலையங்கி அணிவதை அனுமதிக்கும் போக்கை எடுக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று கூறியிருந்தார்," என்றுரைத்தனர்.
"சிங்கப்பூரில் சட்ட, ஒழுங்கைக் கட்டிக்காக்க அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளுக்கும் நாட்டில் வெவ்வேறு இனங்களுக்கும் சமயங்களுக்கும் இடையே அமைதியும் நல்லிணக்கமும் வலுப்பட அது வகுத்துவரும் கொள்கைகளுக்கும் முஸ்லிம் சமூகம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
"நமது வெவ்வேறு தேவைகளுக்கும் நடைமுறைகளுக்கும் மதிப்பளித்து நாம் கூறும் கருத்துகளைச் செவிமடுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
"நமது கருத்துகளை அரசு கவனமாகக் கேட்டு காலத்துக்கு ஏற்றாற்போல கொள்கைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வருகிறது," என்றும் உஸ்தாஸ் அலி தெரிவித்தார்.
"குடிமக்கள் என்ற முறையில் அனைவரையும் ஒன்றாகப் பார்க்கும் நாட்டின் கொள்கைகளுக்கு நாம் மதிப்பளித்து அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
"வேற்றுமைகளைக் களைந்து அவற்றை ஒற்றுமை உணர்வுடன் நாம் ஏற்றுக்கொண்டால், சிங்கப்பூர் தொடர்ந்து கட்டிக்காத்து வரும் அமைதியும் நல்லிணக்கமும் நீண்ட காலத்துக்கு நீடித்து நிலைக்கும்," என்றும் உஸ்தாஸ் அலி செய்தியாளர்களிடம் கூறினார்.