1981க்குப் பின் சென்ற ஜூன் முதல் செப்டம்பரில் பெரும் மழை
தென்மேற்குப் பருவமழை, சென்ற ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்தது. 1981க்குப் பிறகு பெரும் மழை சிங்கப்பூரில் பெய்தது அதுவே மூன்றாவது முறை என்று வருடாந்திர பருவநிலை மதிப்பீடு ஒன்று குறிப்பிட்டுள்ளது. ஜூன் மாதத்தின் 21 தினங்களன்று மழை பெய்தது. இது கடந்த 30 ஆண்டுகளில் ஆக அதிகம் என்று கூறப்பட்டது. சென்ற ஆண்டின் ஆகக் குளிரான தினம் செப்டம்பர் 16 என்றும் தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் நியூட்டன் வட்டாரத்தில் ஒரு கட்டத்தில் 20.9 டிகிரிஸ் செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மேலும், 1929க்குப் பிறகு எட்டாவது முறையாக 2020ஆம் ஆண்டு ஆக வெப்பமானதாக அமைந்ததாக அறிக்கை தெரிவித்திருந்தது.
'முன்னாள் காலாங் எரிவாயு பணிமனையால் பாதிப்பு இல்லை'
முன்னாள் காலாங் எரிவாயு பணிமனை அமைந்துள்ள இடத்தின் மண்ணை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருவதால், வெளியேற்றங்களும் அவ்வப்பொழுது துர்நாற்றமும் இருக்கலாம் என்று சிங்கப்பூர் நில ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அருகில் வசிப்போருக்கு எவ்விதச் சுகாதார ஆபத்துகளும் இதனால் ஏற்படாது என்று ஆணையம் உறுதியளித்தது. தலைவலி, சளிக்காய்ச்சல் போன்ற மருத்துவ ரீதியான பிரச்சினைகள் தங்களுக்கு ஏற்பட்டதாக அவ்வட்டாரக் குடியிருப்பாளர்கள் சிலர் புகார் அளித்ததை அடுத்து துர்நாற்றத்தையும் சத்தத்தையும் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

