பொறியாளர்கள், எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி கூட்டணி
சிங்கப்பூரின் முதல் ரயில் தரநிலைகளை உருவாக்கும் திட்டத்தை சிங்கப்பூர் ரயில் துறை தொடங்கி உள்ளது. தவறான தகவல்கள் சென்றடையும் சாத்தியத்தைக் குறைத்து அனைத்து பங்காளிகளும் இணக்கம் காண்பதற்கு இத்தரங்கள் வழிவகுக்கும்.
முதல் மூன்று அம்சங்களை ஒட்டி பொறியாளர்கள், எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி ஆகிய தரப்புகள் இணைந்து உருவாக்கிய இத்தரங்களை நேற்று ஷங்ரிலா ஹோட்டலில் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தொடக்கி வைத்தார்.
ரயில்கள் செல்லும் பாதைகளுக்குரிய துறைச் சொற்கள், சொற்சுருக்கங்கள் ஆகியவை ஓர் அம்சமாகும். இப்பாதைகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன, ரயில் சொத்துகள் நிர்வாகத்திற்குத் தொடர்பான மேற்கோள் குறிப்புகள் ஆகியவை எஞ்சிய இரு அம்சங்களாகும்.
ரயில்பாதை கட்டமைப்புகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஒன்று சென்ற ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் கீழ் இயங்கும் 17 பணிக்குழுக்கள், தரங்களை உருவாக்குவதில் செயல்பட்டு வருகின்றன. எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி ஆகியவற்றைச் சேர்ந்த கல்வியாளர்கள், பொறியாளர்கள், பிரதிநிதிகள் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளதாக திரு ஓங் குறிப்பிட்டார்.
துறைசார்ந்த முயற்சியான இதில் நிலப் போக்குவரத்து ஆணையமும் ஒரு சிறிய பங்காற்றியுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அது மதிப்புமிக்கது என்றார்.
ரயில் செயல்பாடுகள் நீக்குப்போக்குத்தன்மை அதிகம் இல்லாத வண்ணம், தரங்கள் அமைந்திட வேண்டும் என்று அவர் சுட்டினார்.
இவ்வாறு தரங்களை வகுப்பதால் மூன்று வழிகளில் ரயில் துறை பலனடையும் என்றார் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவரும் பொறியாளர் கழகத் தலைவருமான டாக்டர் ரிச்சர்ட் குவோக்.
மேலும் சீராக இயங்கும் தன்மையை ரயில் துறை பெறும். ரயில் துறையில் பணியாற்றுவோரிடம் எதிர்பார்ப்புகள் என்ன என்பதைத் தெளிவாகத் தெரிவிப்பதால் அவர்களிடம் போட்டித்தன்மை அதிகரிக்கும். தொடர்ந்து முன்னேற்றம் காணவேண்டும் என்ற கலாசாரம் ஊக்குவிக்கப்படும்.
"இந்த தரம் பிற்காலத்தில், வட்டார, அனைத்துலக ரயில் துறைக்கு அளவீடுகளாக திகழும். இதனால் அனைத்துலக ரயில் போக்குவரத்துத் துறையில் சிங்கப்பூரின் தலைமைத்துவம் மேலும் வலுப்பெறும்," என்றார் அவர்.
திட்டத்தை மேலும் சிறப்பிக்க, நினைவுப்புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. நூலை பொறியாளர் கழகம், சிங்கப்பூர் தர மேம்பாட்டு அமைப்பு, எஸ்எம்ஆர்டி ஆகியவை இணைந்து வெளியிட்டன.
"இன்று நாம் கண்டுள்ள முன்னேற்றம், நிலப் போக்குவரத்தின் மற்ற பிரிவுகளிலும் தர மேம்பாடுகள் உருவாவதற்கு வழிகோலும்," என்றார் டாக்டர் குவோக்.
இதையடுத்து சொத்து நிர்வாகம், பராமரிப்பு, பாதுகாப்பு, சேவை ஆகிய அம்சங்களுக்கும் தரங்கள் உருவாக்கப்படும்.