பாதுகாப்பு நடைமுறைகளில் இருந்த குறைபாடுகள் காரண மாக அதன் முக்குளிப்பாளர் ஒருவரான திரு சான் கம் வெங் என்பவர், 2016ல் மரணமுற்றதன் தொடர்பில் முன்பு செந்தோசாவில் செயல்பட்ட 'அன்டர்வாட்டர் வோர்ல்டு சிங்கப்பூர்' எனும் நீர்வாழ் உயிரின காட்சியகத்துக்கு $105,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் குறைபாடுகளில் ஒன்றாக, முக்குளிப்பு செயல்பாடுகளின்போது அவசரநிலை ஏற்பட்டால், மீட்பு நடவடிக்கைகளுக்குப் போதிய அளவுக்கு திட்டமிடப்படவில்லை என்று கூறப்பட்டது.
மேலும் முக்குளிப்பாளர்களின் சாதனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் சோதிக்கப்பட்டதற்கு முறை யான குறிப்புகள் வைத்திருக்கவும் அந்த அக்காட்சியகம் தவறிவிட்டதாக புலனாய்வாளர்கள் கூறினர்.
ஹாவ் பார் லெய்ஷர் நிறுவனத்தின் கீழ் இயங்கிய 'அன்டர் வாட்டர் வோல்ர்டு சிங்கப்பூர்' 2016 ஜூன் மாதம் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது. அது வேலை யிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின்கீழ் குற்றமிழைத்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும், பாதுகாப்புக் குறைபாடுகளால் திரு சான் மரணமடையவில்லை என்று நீதிமன்றம் கூறியது. அந்த 62 வயது ஆடவர் அந்தக் காட்சியகத்தில் 25 ஆண்டுகளாக வேலை செய்திருக்கிறார். அந்தக் காட்சியகம் திறக்கப்படுவ தற்கு முன்பும் அது மூடப்பட்ட பிறகும் கடல்வாழ் உயிரினங்களைப் பிடிப்பதற்கு திட்டமிடும் பணி திரு சானுக்கு அளிக்கப்பட்டது.
அதன் தொடர்பின் 2016 அக்டோபர் 4ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு திரு சானும் அவரது சகாக்களும் சிறுத்தை திருக்கை மீனைப் பிடிக்க முயன்றபோது, விஷத்தன்மை கொண்ட தனது வாலால் அது திரு சானின் நெஞ்சில் ஆழமாகக் குத்தியது. சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் அன்று பிற்பகல் 3.30 மணிக்கு உயிர்நீத்தார். இச்சம்பவத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், கடல்வாழ் உயிரினங்களைப் பிடிப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான முறையான குறிப்புகளை அந்தக் காட்சியகம் வைத்திருக்கவில்லை என தெரியவந்தது.

