பாலியல் பலாத்கார வழக்கு; நீதிமன்றத்தில் முன்னிலையாகாத ஆடவர் கைது

பாலியல் பலாத்கார வழக்கு; நீதிமன்றத்தில் முன்னிலையாகாத ஆடவர் கைது

2 mins read
c3b6f9f5-eca7-4d16-9e53-b6bba97a5421
15 வயது பெண் ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கும் 21 வயது ஆடவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவரை போலிசார் கைது செய்தனர். கோப்புப்படம் -

பெண் ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கும் 21 வயது ஆடவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

15 வயது பெண் ஒருவர் மதுபோதையில் இருந்தபோது அவரைப் பாலியல் ரீதியாக தாக்கிய இருவரில் இவரும் ஒருவர் என நம்பப்படுகிறது.

2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதியன்று பாசிர் ரிஸ் ஸ்திரீட் 51ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடத்தின் தரைத்தளத்தில் அப்பெண் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆடவருக்கு அப்போது 18 வயது.

இன்று காலை தமது தந்தை, வழக்கறிஞர் ஆகியோருடன் அந்த ஆடவர் காலை உணவு சாப்பிட்ட பிறகு மாயமானார்.

அவருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று காலை 10 மணிக்கு நடைபெற இருந்தது.

காலை 9.10 மணி அளவில் வயிறு வலிப்பதாக அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கழிவறைக்குச் செல்வதாகக் கூறிய அந்த ஆடவரைக் காணவில்லை.

தொலைபேசி அழைப்புகளுக்கும் குறுந்தகவல்களுக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

இதன் காரணமாக இன்று அவருக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அவருக்காக அவரது தந்தை செலுத்தியிருந்த $30,000 பிணைத் தொகை பறிமுதல் செய்யப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை.

இதற்கிடையே, அவருக்கு அடைக்கலம் தந்ததாக சந்தேகிக்கப்படும் இன்னொரு 21 வயது ஆடவரும் கைது செய்யப்பட்டார்.

பாலியல் ரீதியாக தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஆடவருடன் சேர்ந்து அந்தப் பெண்ணைப் துன்புறுத்தியதாக நம்பப்படும் இன்னொரு ஆடவர் ஏற்கெனவே தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டார்.