மேலும் 15 பேருக்கு கொரோனா

மேலும் 15 பேருக்கு கொரோனா

1 mins read

சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி மேலும் 15 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,236ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட 15 பேரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். சிங்கப்பூர் வந்ததும் அவர்களுக்கு இல்லத்தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.

சமூக அளவில் யாருக்கும் பாதிப்பில்லை. அதே போல வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலும் கிருமித்தொற்று பாதிப்பில்லை.

இந்நிலையில், 13 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 40 வயது சிங்கப்பூர் பெண் ஒருவரும் அடங்குவார். சிங்கப்பூர் வந்ததும் அவருக்கு செய்யப்பட்ட கொவிட்-19 மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகள் காட்டின.

ஆனால் அவர் இல்லத்தனிமை உத்தரவை நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவர் தேசிய தொற்றுநோய் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவரிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு அகஸ்ட் மாதத்திலிருந்து அவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இம்மாதம் 2ஆம் தேதியன்று அவர் சிங்கப்பூர் திரும்பியதாகவும் இம்மாதம் 16ஆம் தேதி வரை அவருக்கு இல்லத்தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்தது.

கிருமித்தொற்று ஏற்பட்டதாக நேற்று உறுதி செய்யப்பட்டவர்களில் மேலும் இரண்டு சிங்கப்பூரர்களும் இரண்டு நிரந்தரவாசிகளும் அடங்குவர். இவர்கள் இந்தியா, மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பினர்.