தேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்டியு) பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்காக தமது 69வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தோனீசிய செல்வந்தரும் கொடையாளியுமான டாக்டர் தஹீர் $1 மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளார்.
டாக்டர் தஹீர் 1970களில் என்டியுவின் வர்த்தகத் துறையில் பட்டக்கல்வி பயின்றார். அப்போது என்டியு அவருக்கு உபகாரச் சம்பளம் வழங்கியது.
தமக்கு ஆதரவுக் கரம் நீட்டிய பல்கலைக்கழகத்துக்குத் தமது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் அவர் இப்போது நன்கொடை வழங்கியுள்ளார்.
"எனது பெற்றோர் பிழைப்புக்காக மூன்று சக்கர ரிக்ஷாக்களைச் செய்தவர்கள். நான் மருத்துவராக அப்போது படித்துகொண்டிருந்தேன். ஆனால் எனது தந்தையின் உடல்நிலை நலிவுற்றதும் அவரது வர்த்தகத்தைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அதனால் மருத்துவக் கல்வியைக் கைவிடும் கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.
"நான் வழங்கும் இந்த நன்கொடை வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவும் என நம்புகிறேன். என்டியு எனக்கு முன்பு உதவிக் கரம் நீட்டியதுபோல நான் தரும் இந்தத் தொகை வசதி குறைந்த மாணவர்களுக்கு ஆதரவு தரும் என நம்புகிறேன்," என்று சிங்கப்பூர் நிரந்தரவாசியான டாக்டர் தஹீர் தெரிவித்தார்.

