கப்பலிலிருந்து இன்னொரு கப்பலுக்கு கொள்கலன்களை கையாளும்போதே எரிவாயு நிரப்பும் முதல் ஆசியத் துறைமுகமாக சிங்கப்பூர்

கப்பலிலிருந்து இன்னொரு கப்பலுக்கு கொள்கலன்களை கையாளும்போதே எரிவாயு நிரப்பும் முதல் ஆசியத் துறைமுகமாக சிங்கப்பூர்

2 mins read
4a526bc1-57f4-4955-a6e8-dc396a22a095
கொள்கலன் கப்பலுக்கு இன்னொரு கப்பல் மூலம் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) நிரப்பும் ஆசியாவின் முதல் துறைமுகமாக சிங்கப்பூர் உருவெடுத்து இருக்கிறது.படம்: CMA CGM GROUP AND FUELNG -

கொள்கலன் கப்பலுக்கு இன்னொரு கப்பல் மூலம் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) நிரப்பும் ஆசியாவின் முதல் துறைமுகமாக சிங்கப்பூர் உருவெடுத்து இருக்கிறது.

சிங்கப்பூர் கடற்துறையில் தூய எரிபொருளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டு வரும் வேளையில், இது குறிப்பிடத்தக்க மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

பாசிர் பாஞ்சாங் முனையத்தில் நேற்று 'சிஎம்ஏ சிஜிஎம் ஸ்கேண்டோலா' எனும் கொள்கலன் கப்பலில் இருந்து சரக்குக் கொள்கலன்களை ஏற்றி இறக்கியபோது, சிங்கப்பூரின் முதல் எல்என்ஜி நிரப்புக் கப்பலான 'ஃபியூல்எல்என்ஜி பெலினா' மூலம் 'சிஎம்ஏ சிஜிஎம் ஸ்கேண்டோலா' எனும் கொள்கலன் கப்பலுக்கு 7,100 கனமீட்டர் எல்என்ஜி நேற்று நிரப்பப்பட்டது.

இப்படிச் சரக்குகளைக் கையாளும்போதே ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலில் எல்என்ஜி எரிபொருள் நிரப்பப்பட்டது ஆசியாவில் இதுவே முதன்முறை என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹோங் டாட் குறிப்பிட்டார்.

இவ்வாறு சரக்குகளை ஏற்றி இறக்கும்போதே எரிபொருள் நிரப்பப்படுவதால் கப்பல்கள் துறைமுகத்தில் நிற்க வேண்டிய நேரம் குறைகிறது. மேலும், எல்என்ஜி மூலம் இயங்கும் பெரிய அளவிலான கப்பல்கள் சிங்கப்பூருக்கு வந்து எரிபொருள் நிரப்பிச் செல்ல முடியும்.

உலகிலேயே ஆகப் பெரிய கடல்துறை எரிபொருள் நிரப்பு மையமாக சிங்கப்பூர் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 50 மில்லியன் டன் எரிபொருளை சிங்கப்பூர் விற்று வருகிறது.

இந்நிலையில், ஆசியாவிலும் அதற்கப்பாலும் கப்பல் மூலம் இன்னொரு கப்பலுக்கு எல்என்ஜி எரிபொருள் நிரப்புவதில் முன்னணி மையமாகத் திகழவேண்டும் என இலக்கு கொண்டுள்ள சிங்கப்பூருக்கு நேற்றைய நடவடிக்கை ஒரு முக்கிய படிக்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

'ஃபியூல்எல்என்ஜி பெலினா' கப்பல் 7,500 கனமீட்டர் கொள்ளளவு கொண்டது என்றும் வரும் மாதங்களில் அது மேலும் பல கொள்கலன் கப்பல்களுக்கு திரவ இயற்கை எரிவாயுவை விநியோகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.