45 முதல் 59 வயதுக்கு உட்பட்டோருக்குத் தடுப்பூசி

45 முதல் 59 வயதுக்கு உட்பட்டோருக்குத் தடுப்பூசி

3 mins read
ed300cc2-03c0-4045-8e62-37b4708d19ea
-

கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டம் 45 முதல் 59 வய­துக்­குட்­பட்­டோ­ருக்கு விரி­வு­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங் அறி­வித்­துள்­ளார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள விரும்­பு­வோர் vaccine.gov.sg எனும் இணை­யத்­த­ளம் வாயி­லாக தங்­களது பெய­ரைப் பதி­வு­செய்­து­கொள்­ள­லாம். அவர்­கள் மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பப் பயன்­பாடு குறித்து நன்கு அறிந்­தி­ருப்­பர் என்­ப­தால் அவர்­க­ளுக்­குக் கடி­தம் அனுப்­பப்­ப­டாது என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு கான், முன்­னு­ரி­மைக் குழுக்­களுக்கு தடுப்­பூசி நட­வ­டிக்கை சிறப்­பா­கப் போய்க்­கொண்­டி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

அத­னால், நேற்று முதல் இள­ம் வ­ய­துப் பிரி­வி­ன­ருக்­கும் அத்­திட்­டத்தை விரி­வு­ப­டுத்துவதாக அவர் குறிப்­பிட்­டார்.

"எங்­க­ளது தடுப்­பூசி நட­வ­டிக்­கை­க­ளைச் சீராக விரி­வு­ப­டுத்தி வரு­வ­தால் அனை­வ­ரும் பொறுமை காத்து, ஆத­ரவு அளிக்­கும்­படி கேட்டுக்­கொள்­கி­றோம்," என்­றார் அமைச்­சர் கான்.

அத்­து­டன், தொடக்க கட்­டங்­களில் ஏதே­னும் வச­திக்­கு­றைவு ஏற்­பட்­டி­ருந்­தால் அதற்­காக நம் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­டம் மன்­னிப்பு கேட்­டுக்­கொள்ள விரும்­பு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

சரா­ச­ரி­யாக கடந்த வாரத்­தில் நாளொன்­றுக்கு 40,000 பேருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­ட­தாக திரு கான் குறிப்­பிட்­டார். அவர்­களில் இரண்­டாம் முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ரும் அடங்­கு­வர்.

திட்­ட­மிட்­ட­படி தடுப்­பூ­சி­கள் வந்து சேரும் பட்­சத்­தில், இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டிற்­குள் அனைத்­துச் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் நீண்­ட­கா­லக் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­கும் போது­மான அள­வில் தடுப்­பூசி­க­ளைக் கொண்­டி­ருப்­போம் என்று அமைச்­சர் கான் கூறி­னார். அவ்­வாறு நடந்­தால், சிங்­கப்­பூ­ரால் இவ்­வாண்டு இறு­திக்­குள் கொவிட்-19 தடுப்­பூசி நட­வ­டிக்­கையை முடித்து­விட இய­லும்.

இணை­யத்­த­ளம் வழி­யா­கப் பதிவு­செய்­த­பின், 45 முதல் 59 வய­துக்­குட்­பட்­டோ­ருக்கு ஒரு குறுஞ்­செய்தி அனுப்­பப்­படும். அந்­தக் குறுஞ்­செய்­தி­யில் காணப்­படும் தனிப்­பட்ட இணைய முக­வ­ரி­யைச் சொடுக்கி, தடுப்­பூ­சிக்­கான நாள், நேரத்தை அவர்­கள் தெரி­வு­செய்­ய­லாம்.

தங்­க­ளது பெய­ரைப் பதி­வு­செய்த சில நாள்­க­ளுக்­குள் அவர்­க­ளுக்­குக் குறுஞ்­செய்தி அனுப்­பப்­படும். என்­றா­லும், தடுப்­பூசி விநி­யோ­கம் தாம­த­மா­கும் பட்­சத்­தில் குறுஞ்­செய்தி அனுப்­பப்­பட அதிக காலம் எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­லாம் என்று திரு கான் சொன்­னார்.

குறுஞ்­செய்தி வந்த 14 நாள்­களுக்­குள் தடுப்­பூ­சிக்­கான நாள், நேரத்­தைத் தெரி­வு­செய்ய வேண்­டும்.

சிங்­கப்­பூ­ரில் நேற்று முன்­தி­னம் வரை 1,109,000 பேருக்கு கொரோனா தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. அவர்­களில் கிட்­டத்­தட்ட 310,000 பேர் இரு­முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள்.

மூத்த குடி­மக்­க­ளைப் பொறுத்­த­மட்­டில், 55 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் மேல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர் அல்­லது தடுப்­பூசி போடு­வதற்­கான நேரத்­தைத் தெரி­வு­செய்­து உள்­ள­னர் என்று அமைச்சு தெரி­வித்­தது.

இப்­போ­தைக்கு 31 தடுப்­பூசி மையங்­கள் செயல்­பட்டு வரு­வ­தாக அமைச்­சர் கான் குறிப்­பிட்­டார். அத்­து­டன், 20 பல­துறை மருந்­த­கங்­க­ளி­லும் 22 பொதுச் சுகா­தார ஆயத்­த­நிலை தனி­யார் மருந்­த­கங்­களி­லும் தடுப்­பூசி போடப்­ப­டு­கிறது.

வரும் ஏப்­ரல் மாத நடுப்­ப­கு­தி­வாக்­கில் மொத்­தம் 40 தடுப்­பூசி மையங்­கள் செயல்­பாட்­டில் இருக்­கும் என்­றும் அமைச்­சர் சொன்­னார்.

சமூக ஒன்றுகூடல்களில் அதிகபட்சம் எட்டுப் பேர் மட்டுமே இடம்பெறலாம்

திரு­ம­ணம் போன்ற நிகழ்­வு­களில் பங்­கேற்­போர் வரம்பு உயர்த்­தப்­பட இருந்­தா­லும், சமூக ஒன்­று­கூ­டல்­களில் அதிகபட்சம் எட்­டுப் பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற வரம்பு நீடிக்­கிறது.

சமூக ஒன்­று­கூ­டல்­களில் அதி­க­மா­னோர் இடம்­பெற அனு­ம­திப்­பது கொவிட்-19 தொற்று அபா­யத்தை அதி­க­ரித்­து­வி­ட­லாம் என்று அமைச்­சர் கான் குறிப்­பிட்­டார்.

இருப்­பி­னும், சமூக ஒன்­று­கூடல்­களில் பங்­கேற்­போ­ருக்­கான வரம்பு குறித்து அர­சாங்­கம் அவ்­வப்­போது மறு­ஆய்வு செய்து வரு­வ­தாக சிங்கப்­பூ­ரர்­க­ளி­டம் அவர் உறு­தி­ கூறினார்.

"கொரோனா பர­வல் பிரச்­சினை இருக்­காது என நாம் உறு­தி­யாக இருக்­கும்­போது, தேவை­யான சரிக்­கட்­டல்­களை மேற்­கொள்­வோம். சரி­யான நேரத்­தில் பொருத்­த­மான அறி­விப்பை வெளி­யி­டு­வோம்," என்­றார் அமைச்­சர்.