சிங்கப்பூரில் புதிதாக 15 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 60,236ஆக உயர்ந்தது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். சிங்கப்பூர் வந்திறங்கியதும் இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
சமூகத்திலும் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளிலும் புதிதாக எவரையும் கொரோனா தொற்றவில்லை.
முன்னதாக, நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 13 பேரில் 40 வயது சிங்கப்பூர் பெண்ணும் ஒருவர்.
ஆஸ்திரேலியாவில் இருந்து இம்மாதம் 2ஆம் தேதியன்று அவர் சிங்கப்பூர் திரும்பினார். விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில் அவருக்குத் தொற்று இல்லை எனத் தெரியவந்தது.
இல்லத் தனிமைக் காலத்தின் இறுதிக்கட்டத்தில் மீண்டும் செய்யப்பட்ட பரிசோதனையில் அவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. அவர் 2019 ஆகஸ்ட் முதல் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார்.
கிருமித்தொற்று கண்டுள்ளதாக நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டவர்களில் மேலும் இரண்டு சிங்கப்பூரர்களும் இரண்டு நிரந்தரவாசிகளும் அடங்குவர். அவர்கள் இந்தியா, மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பினர்.
மற்றவர்களில் ஒருவர் சார்ந்திருப்போர் அட்டையில் இருக்கும் இந்தியர்; ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த வேலை அனுமதி அட்டைதாரர்; ஐவர் பங்ளாதேஷ், இந்தியா, பிலிப்பீன்சைச் சேர்ந்த வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்கள்; இன்னொருவர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இருந்து குறுகிய கால விசாவில் வந்தவர்.
வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்கள் ஐவரில் ஒருவர் இல்லப் பணிப்பெண் என்றும் அவர்கள் ஐவரிடமும் கொரோனா தொற்றுக்கான அறிகுறி ஏதும் காணப்படவில்லை என்றும் அமைச்சு தெரிவித்தது.
நேற்று முன்தின நிலவரப்படி, இதுவரை 60,048 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டனர். சிங்கப்பூரில் கொரோனா தொற்று காரணமாக 30 பேரும் தொற்று கண்டவர்களில் 15 பேர் வேறு உடல்நலக் கோளாறுகளாலும் இறந்துவிட்டனர்.

