கொவிட்-19 பரவல் காரணமாக சுற்றுப்பயணிகள் வருகை குறைந்ததால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சைனாடவுன் வட்டாரத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் மின்னிலக்கமயமாவதற்குக் கூடுதல் உதவி பெறலாம்.
இதற்காக 'சோப்', 'கியூ10' ஆகிய நிறுவனங்களைத் தொழில்நுட்பப் பங்காளிகளாக சைனாடவுன் மின்னிலக்கமயக் குழு நியமித்து இருக்கிறது. சைனாடவுன் வட்டாரத்திற்கான மின்னிலக்கத் திட்டங்களை வகுத்து, இணையம் வழியாகவும் கடைகளிலும் வர்த்தகத்தைப் பெருக்க அவை உதவும்.
கிரேத்தா ஆயர், தெலுக் ஆயர், புக்கிட் பாசோ ஆகிய பகுதிகளில் இந்தத் திட்டம் முதலில் தொடங்கப்படும். கிட்டத்தட்ட 1,000 வணிகர்கள் அப்பகுதிகளில் செயல்பட்டு வருகின்றனர்.
பாரம்பரிய வட்டாரங்களில் உள்ள கடைகள் மின்னிலக்கமயமாவதற்கு உதவும் வகையில் ஏற்கெனவே நடப்பில் உள்ள திட்டங்களுடன் இந்தப் புதிய திட்டமும் இடம்பெறுவதாக தொடர்பு, தகவல் மூத்த அமைச்சர் சிம் ஆன் தெரிவித்தார்.
லிட்டில் இந்தியா, கம்போங் கிளாம் வட்டாரங்களில் இத்தகைய திட்டங்கள் கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து நடப்பிலிருப்பதாக திருவாட்டி சிம் ஆன் குறிப்பிட்டார்.

