சிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்து வரும் நிலையில் உடல்நோவு தணிப்புச் சிகிச்சை குறித்த விழிப்புணர்வும் அதற்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, அண்மையில் சிங்ஹெல்த் டியூக் - என்யுஎஸ் ஆதரவு, உடல்நோவு தணிப்பு சேவை மையம் தொடங்கப்பட்டது. சிங்ஹெல்த் குழுமத்தினுள் அனைத்து ஆதரவு, உடல்வலி தணிப்பு சேவைகளை இம்மையம் ஒருங்கிணைக்கும்.
இந்நிலையில், அம்மையமும் சிங்கப்பூர் அந்திமகால மன்றமும் இணைந்து நேற்று முன்தினம் ஒரு மெய்நிகர் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தன.
அதில் கலந்துகொண்டு பேசிய சிங்கப்பூர் தேசிய புற்றுநோய்த் தடுப்பு மையத்தின் ஆதரவு, உடல்நோவு தணிப்பு சேவைப் பிரிவின் மூத்த ஆலோசகர் பேராசிரியர் நியோ, சிங்கப்பூர் மரணம் மற்றும் இறந்துபோவது குறித்த கலாசாரத்தை மாற்ற வேண்டிய தேவை இருந்ததாகக் குறிப்பிட்டார்.
"மரணத்தைப் பற்றி பேசக்கூடாது, அது மறைக்கப்பட வேண்டிய விஷயம் எனும் ஒருவிதமான கலாசார நம்பிக்கை இன்னும் மூத்த தலைமுறையினரிடம் இருக்கிறது," என்றார் பேராசிரியர் நியோ.
உடல்நோவு தணிப்பு சேவை 1985ஆம் ஆண்டு செயின்ட் ஜோசஃப் அந்திமகால இல்லத்தில் முதன்முறையாகத் தொடங்கப்பட்டது. அதன்பின் அதிகமான அந்திமகால இல்லங்கள் கட்டப்பட்டு, அந்திமகாலப் பராமரிப்பு சேவைகள் வழங்கப்பட்டன.
இப்போது, ஆதரவுப் பராமரிப்பு என அழைக்கப்படும் முன்கூட்டிய உடல்நோவு தணிப்பு சேவை மீது கவனம் செலுத்தப்படுகிறது. ஒருவருக்குப் பெரிய அளவிலான கட்டிகளுடன் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையிலும் அவர் உடல்வலியைத் தணிக்கும் வகையில் ஆதரவுப் பராமரிப்பு சேவையைப் பெறலாம்.

