பாலியல் பலாத்காரத்திற்கு 15 வயது சிறுமியை உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 21 வயது ஆடவர், திங்கட்கிழமை நீதிமன்றம்வரவில்லை. அதையடுத்து ஆடவரை போலிசார் நேற்று முன்தினம் பென்கூலனில் உள்ள ஸ்ட்ராண்ட் ஹோட்டலில் கைது செய்தனர்.
ஆடவர் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் காலை 10 மணிக்கு முன்னிலையாக வேண்டியிருந்தது.
தன் தந்தையுடனும் வழக்கறிஞருடனும் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆடவர், வயிற்றுவலி என்று கூறி 9.10 மணியளவில் கழிவறைக்குச் சென்றுவிட்டார். அதையடுத்து அவரைக் காணவில்லை. தொலைபேசி, குறுந்தகவல் மூலம் அவரைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை.
அதே நாளில் ஆடவரின் பெயரில் உயர் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்தது.
ஆடவர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்துவது தொடர்பில் விசாரணை மேற்கொண்டிருப்பதாக போலிசார் நேற்று தெரிவித்தனர்.
ஆடவருக்கு அடைக்கலம் தந்ததாகக் கூறப்படும் இன்னொரு 21 வயது ஆடவரை போலிசார் தடுத்து வைத்துள்ளனர்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆடவர் 18 வயதாக இருந்தபோது, பாசிர் ரிஸ் ஸ்திரீட் 51ன் வீவக கீழ்த்தளத்தில் 2017ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதியன்று குற்றம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
தன் நண்பர்களுடன் 'ட்ருத் ஆர் டேர்' விளையாடிய அந்த 15 வயது சிறுமி, நடக்க முடியாத அளவுக்கு மது போதையில் இருந்தார்.
பின் நண்பர் கூட்டம் சென்ற பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ஆடவர், இன்னொரு ஆடவருடன் சேர்ந்து சிறுமியை போதையிலிருந்து எழுப்ப முயன்றதாகவும் சிறுமி மயக்கநிலையில் இருந்ததை இருவரும் அறிந்து பாலியல் ரீதியாக அவரைத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சிறுமியைச் சீரழித்ததாக ஏற்கெனவே ஆடவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்றோர் ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
சிறுமியின் அடையாளத்தைக் காக்க, வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்திற்கு வராத ஆடவர், தப்பியோடும் சாத்தியம் அதிகம் இருப்பதால் இம்முறை பிணை வழங்க வேண்டாம் என்று அரசாங்கத் தரப்பினர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டனர்.
ஆடவர் மீண்டும் தடுத்து வைக்கப்படுவதற்கு முன், அவரின் தந்தையுடன் 15 நிமிடங்கள் பேச அனுமதி வழங்கப்பட்டது.
முதல் முறை ஆடவர் பிணையில் விடுவிக்கப்பட்டபோது, அவரின் தந்தை தந்த $30,000 பிணைத்தொகை பறிமுதல் செய்யப்படுமா என்பது குறித்துத் தகவல் இல்லை.

