செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
1d0a7cc6-4466-4a90-9378-3c9d3063433b
-

மாற்றுத் திறனாளிகளுக்கு மின்னிலக்கத் திறன் மேம்பாடு

உடற்குறையாளர்களுக்குப் புதிய மின்னிலக்கத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியும் சுமிடோமோ லைஃப் இன்ஷுரன்ஸ் நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன. 11 வாரங்களுக்கு நடத்தப்படும் இத்திட்டம், இம்மாதம் 15ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.

திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு மின்னிலக்கத் துறையில் அதிகம் தேவைப்படும் திறன்கள் கற்றுக்கொடுக்கப்படும். 'புளூம்பெர்க்', 'ஃபேஸ்புக்', 'மைக்ரோசாஃப்ட்' போன்ற நிறுவனங்களின் இணைய வகுப்புகள் மூலம் மின்னிலக்கத் திறன்களைப் பெறுவதுடன் பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்படும். அத்துடன் துறையில் ஏற்கெனவே பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள், வேலை தொடர்பான பயிற்சிகளையும் தனிப்பட்ட முறையில் வழிகாட்டுதலையும் வழங்குவர். உடற்குறையுள்ள இளையர்கள் மின்னிலக்கத் துறையில் பணிபுரிவதில் நாட்டம் கொள்ள இத்திட்டம் ஊக்குவிக்கும் என்று சுமிடோமோ லைஃப் தெரிவித்தது.

கிரிப்டோ வர்த்தகத் தளம் 'டோர்க்' எதிராக 70 போலிஸ் புகார்கள்

'டோர்க்' எனும் கிரிப்டோ நாணய வர்த்தகத் தளத்திற்கு எதிராகக் குறைந்தது 70 போலிஸ் புகார்கள் பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த வர்த்தகர் பெர்னர்ட் ஓங், 'டோர்க்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்று அறியப்படுகிறது.

இந்நிறுவனத்துடன் முதலீடு செய்தவர்கள் இதுவரை கிரிப்டோ நாணய ரீதியில் மில்லியன் கணக்கில் இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 'டோர்க்' ஊழியர்களில் ஒருவர் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் அவரது அங்கீகரிக்கப்படாத வர்த்தக நடவடிக்கைகளால் சில்லறை வர்த்தக முதலீட்டாளர்களின் கணக்குகளில் பெருமளவு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சென்ற மாதம் சீனப் புத்தாண்டுக்கு மூன்று நாட்கள் முன்னர் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஊழியரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறிய திரு ஓங், பின்னர் நிறுவனத்தைக் கலைக்க விண்ணப்பித்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. 120 நாடுகளைச் சேர்ந்த 14,000க்கு மேற்பட்டவர்கள் 'டோர்க்' நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் என்று கூறப்படுகிறது. இது தொடர்பில் விசாரணை தொடர்கிறது.