வசதிகுறைந்த என்டியு மாணவர்களுக்கு இந்தோனீசிய தொழிலதிபர் 1 மில்லியன் வெள்ளி நன்கொடை

வசதிகுறைந்த என்டியு மாணவர்களுக்கு இந்தோனீசிய தொழிலதிபர் 1 மில்லியன் வெள்ளி நன்கொடை

2 mins read
af91907a-8244-432b-af36-b0c1c14a7820
$1 மில்லியன் மதிப்பிலான காசோலையை டாக்டர் தாஹிர் (வலமிருந்து 3வது) நேற்று வழங்கினார். படம்: என்டியு -

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் (என்­டியு) முன்பு நன்­யாங் பல்­க­லைக்­க­ழ­க­மாக இருந்­த­போது, 21 வயது தாஹிர் 1973ல் வர்த்­த­கத் துறை­யில் பட்­டம் பெறப் பயின்று வந்­தார்.

அப்­போது பள்ளி அவ­ருக்கு உப­கா­ரச் சம்­ப­ளம் வழங்­கி­யது. 48 ஆண்­டு­கள் கழித்து, வசதி­கு­றைந்த என்­டியு மாண­வர்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கும் வகை­யில் தொழி­ல­தி­பர் தஹிர் $1 மில்­லி­யன் நன்­கொடை வழங்­கி­யுள்­ளார்.

நிரந்­த­ர­வா­சி­யான தாஹிர், வெள்­ளிக்­கி­ழமை தமது 69வது பிறந்­த­நா­ளைக் கொண்­டா­ட­வுள்ள நிலை­யில், இந்த நன்­கொ­டையை வழங்­கி­யுள்­ள­தாக கூறப்­பட்­டது.

'பெடி­கேப்' எனப்­படும் மூன்று சக்­கர ரிக்­‌ஷாக்­க­ளைத் தயா­ரிப்­பது தம் பெற்­றோ­ரின் வேலை என்று பகிர்ந்­து­கொண்ட தாஹிர், தந்தை உடல்­ந­ல­மில்­லா­மல் போன­தால் வியா­பா­ரத்­தில் உதவ தம் மருத்­துவப் படிப்­பைக் கைவிட வேண்டி­யி­ருந்­த­தா­கக் கூறி­னார்.

அவ­ருக்கு என்­டியு முன்பு கைகொ­டுத்­தது போலவே, தாம் வழங்­கி­யுள்ள இந்த நன்­கொடை, ஆத­ரவு தேவைப்­படும் மாண­வர்­களுக்கு உத­வும் என்று தாம் நம்பு­வதாக கூறி­னார்.

நிதிச் சேவை­கள், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, சொத்­துச் சந்தை சார்ந்த நிறு­வ­னங்­க­ளைக் கொண்ட இந்­தோ­னீ­சி­யா­வின் மிகப் பெரிய கூட்டு நிறு­வ­ன­மான 'மாயா­படா குரூப்'பின் நிறு­வ­னர் டாக்­டர் தாஹிர்.

அவர் வழங்­கி­யுள்ள $1 மில்­லி­யனுக்கு இணை­யாக அர­சாங்­க­மும் நிதியுதவி வழங்­கும். மொத்­தம் $2.5 மில்­லி­யன் அறக்­கட்­டளை நிதித் தொகை கொண்டு, வச­தி­கு­றைந்த என்­டியு மாண­வர்­க­ளுக்கு உத­வித்­தொகை அளிக்­கப்­படும். மாண­வர் பரி­மாற்­றத் திட்­டம் ஒன்­றுக்கு டாக்­டர் தாஹிர் 2018ல் $500,000 நன்­கொடை வழங்­கி­யி­ருந்­தார்.

கொள்­ளை­நோய் தொடர்­பில் நிதி நெருக்­க­டிக்கு ஆளான மாண­வர்­க­ளுக்கு உத­வச் சென்ற ஆண்டு கொவிட்-19 நிவா­ர­ணத் தொகுப்­புத் திட்­டம் ஒன்றை என்­டியு அறி­முகப்­படுத்­தி­யது. திட்­டத்­திற்கு டாக்­டர் தாஹிர் $10,000 வழங்­கி­னார்.