இளம் சிங்கப்பூரர்கள், அதிக வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்கள் ஆகியோர் குடியேறிகள் தொடர்பில் கூடுதலாக ஆக்கபூர்வ சிந்தனை கொண்டிருப்பதாக கொள்கை ஆய்வுக் கழகம் கண்டறிந்துள்ளது.
அதிகக் கல்வித் தகுதி உள்ளவர்கள், கூடுதல் சம்பளம் பெறுபவர்கள், பெரிய வீடமைப்பு வகைகளில் வசிப்பவர்கள் ஆகியோர் குடியேறிகள் மற்றும் குடிநுழைவு தொடர்பிலான பொருளியல் தாக்கம் குறித்துக் கூடுதல் ஆக்கப்பூர்வ சிந்தனை கொண்டுள்ளனர்.
இருப்பினும், இதே குடியேறிகளால் ஏற்படக்கூடிய சமூக, கலாசார விளைவுகள் தொடர்பில் ஆக்கபூர்வ சிந்தனை சற்று குறைந்திருந்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள், நிரந்தரவாசிகள் ஆகிய இரு தரப்பினரும் குடியேறிகள் தொடர்பில் கூடுதலாக ஆக்கபூர்வ சிந்தனை கொண்டுள்ளது ஆச்சரியப்படக்கூடிய ஒன்று அல்ல.
ஏனெனில், ஒரு கட்டத்தில் அவர்களும் அதே குடியேறிகளாக இங்கு வந்தவர்கள் என்பதே இதற்குக் காரணமாகும்.
வசதிகுறைந்த சிங்கப்பூரர்கள், பொருளியல் மற்றும் வேலைவாய்ப்பு ரீதியாக குடியேறிகள் மிரட்டல் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரின் வளரச்சியில் குடியேறிகளின் தாக்கம் குறித்து சிங்கப்பூரர்கள் 45.1 விழுக்காட்டினரால் முடிவெடுக்க முடியவில்லை.
இருப்பினும், குடியேறிகளால் தங்களின் நாட்டு வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்படுவதாக மலேசிய, தாய்லாந்து, ஆஸ்திரேலிய நாட்டு மக்களில் 40 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டவர்கள் ஆய்வில் தெரிவித்தனர்.
கலாசார பன்முகத்தன்மையைக் குடியேறிகள் வலுப்படுத்துகின்றனர் என்று கூறப்படுவதற்கு சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள், நிரந்தரவாசிகள், இளம் சிங்கப்பூரர்கள் ஆகியோர் ஆதரவளித்தனர்.
மூத்த சிங்கப்பூரர்கள் மற்றும் சிங்கப்பூரிலேயே பிறந்தவர்கள், சிங்கப்பூருக்குள் நுழையும் வெளிநாட்டவர் எண்ணிக்கையின் வரம்பு மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று ஆய்வில் தெரிவித்திருந்தனர்.
குடிநுழைவு காரணத்தால் சிங்கப்பூரில் வேலையின்மை அதிகரித்ததாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் கூறியிருந்தனர். 21க்கும் 35க்கும் இடைப்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களில் இதே கருத்து குறித்து 38.4 விழுக்காட்டினர் மட்டுமே ஆமாம் என்று தெரிவித்திருந்தனர்.
குடியேறிகளால் சமூக மோதல்கள் ஏற்படுவது தொடர்பில் உள்ளூரிலேயே பிறந்தவர்களுக்கும் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு இருந்ததும் ஆய்வில் தெரியவந்தது.

