சிங்கப்பூரர்களின் மனநிலை தொடர்பில் கொள்கை ஆய்வுக் கழகத்தின் கண்டுபிடிப்புகள்
அரசாங்கத்தின் மீது சிங்கப்பூரர்களுக்கு அதிகளவு நம்பிக்கை உள்ளது. ஆனால், அவர்களிடத்தில் அரசியல் ஆர்வம் இல்லை என்று கொள்கை ஆய்வுக் கழகம் (ஐபிஎஸ்) கண்டறிந்துள்ளது.
அமைப்புகள் மீதும் அரசு மீதும் சிங்கப்பூரர்கள் கொண்டுள்ள நம்பிக்கை அதிகம் என்றாலும் இளம் வயதினர் மற்றும் சிங்கப்பூரில் பிறந்தவர்களுக்கு இதே உணர்வு இல்லை என்று கூறப்பட்டது.
அமைப்புகள், அரசியல், கொள்கைகள் தொடர்பில் சிங்கப்பூரர்களின் மனப்போக்கை ஆய்வாளர்கள் ஆராய்ந்ததில், மூன்றில் இருவருக்கு அரசியல் விவகாரங்களில் ஆர்வம் இல்லை என்று தெரியவந்தது. கொள்கை ஆய்வுக் கழகம் நேற்று அதன் ஆய்வு முடிவுகளை அறிவித்தது.
பொது இடங்களில் அரசு கண்காணிப்பு இருப்பதை ஆதரித்த சிங்கப்பூரர்கள், அதே கண்காணிப்பு தனிப்பட்ட சூழல்களிலோ தங்களுக்குத் தெரிவிக்காமலோ நடைபெறக்கூடாது என்றனர்.
மக்களிடையே நிலவும் நம்பிக்கைகள், 80 நாடுகளில் சமூக-அரசியல் ரீதியாக காலப்போக்கில் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் 'வோர்ல்ட் வேலியூஸ் சர்வே' என்ற அனைத்துலக ஆய்வுத் திட்டத்தின் ஓர் அங்கமே 'ஐபிஎஸ் சோஷல் லேப்' மேற்கொண்டுள்ள இந்த ஆய்வாகும்.
ஆய்வாளர்கள் நவம்பர் 2019க்கும் மார்ச் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் 2,012 சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுடன் நேர்முகப் பேட்டி நடத்தினர்.
சிங்கப்பூர் அமைப்புகள் மீது பொதுமக்கள் நம்பிக்கை, அரசியல் தொடர்பான மனப்போக்கு, அரசு கண்காணிப்பு தொடர்பான மனப்போக்கு, குடிநுழைவு தொடர்பான மனப்போக்கு ஆகிய நான்கு அம்சங்களில் ஆய்வு கவனம் செலுத்தியது. கழகத்தின் கண்டுபிடிப்புகள்:
அமைப்புகள் மீது அதிகளவு நம்பிக்கை
அரசாங்கம், நாடாளுமன்றம், நீதிமன்றங்கள், சிங்கப்பூர் காவல் படை, சிங்கப்பூர் ஆயுதப் படை, அரசாங்கத் துறை ஆகியவற்றின் மீது சிங்கப்பூரர்கள் ஆக அதிக நம்பிக்கை கொண்டுள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது. அனைத்து அமைப்புகள் மீதும் பெருமளவு நம்பிக்கை கொண்டிருப்பதாக குறைந்தது 70 விழுக்காட்டினர் கூறினர்.
நாட்டில் ஊழல் குறைவாக இருப்பதாக 62.1 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
அரசாங்கம் மீது அதிக நம்பிக்கை
அரசாங்கம் மீது நம்பிக்கை இருப்பதாக கிட்டத்தட்ட 81.5 விழுக்காட்டினர் ஆய்வில் தெரிவித்திருந்தனர். இதை ஒப்பிடுகையில் சீன அரசாங்கம் மீது நம்பிக்கை உள்ளதாக அந்நாட்டின் 94.9 விழுக்காட்டினர் கூறியிருந்தனர்.
இளம் சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூரிலேயே பிறந்தவர்களுக்கும் அதிக நம்பிக்கை இல்லை என்று கண்டறியப்பட்டது. அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை என்று சிங்கப்பூரில் பிறந்த 20.2 விழுக்காட்டினர் ஆய்வில் கூறியிருந்தனர்.
அரசியலில் ஆர்வமில்லை
அரசியல் விவகாரங்களில் ஆர்வம் இருப்பதாக 37.2 விழுக்காட்டினர் மட்டுமே ஆய்வில் தெரிவித்தனர். ஆர்வம் இருந்தவர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருந்தனர்; கூடுதல் கல்வித் தகுதிகளும் சம்பளமும் பெற்றிருந்தனர்.
சிங்கப்பூரில் மனித உரிமைக்கு மதிப்பளிக்கப்படுவதாக ஆய்வில் 87.6 விழுக்காட்டினர் கூறியிருந்தனர்.
தனிப்பட்ட சூழல்களில் அரசாங்கக் கண்காணிப்பு வேண்டாம்
பொது இடங்களில் அரசாங்கம் மக்களைக் கண்காணிப்பதற்கு உரிமை உண்டு என்று மூன்றில் இருவர் தெரிவித்தனர். ஆனால் ஒருவரின் இணைய நடவடிக்கைகளைக் கண்காணிக்க அரசுக்கு உரிமை உண்டு என்று கிட்டத்தட்ட 25 விழுக்காட்டினர் மட்டுமே கூறினர்.
அரசாங்கக் கண்காணிப்பு இருப்பது தொடர்பில் மூத்த சிங்கப்பூரர்கள் கூடுதல் வரவேற்பு அளிப்பதாகவும் ஆய்வு கண்டறிந்தது.

