50,000 பேருக்குக் கடிதம்; 100 பேருக்கு 80 பேர் ஊசிக்கு நாள், நேரம் ஒதுக்கினர்
கொவிட்-19 தடுப்பூசி கடிதம் அனுப்பப்பட்ட கல்வி நிலையங்களைச் சேர்ந்த ஊழியர்களில் 80%க்கும் அதிகமானோர் ஊசி போட்டுக்கொள்ள பதிந்துகொண்டுள்ளனர்.
கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் இதனை அறிவித்தார். முதல் கட்டமாக ஏறக்குறைய 50,000 கடிதங்கள் மார்ச்சில் அவர்களுக்கு அனுப்பப்பட்டன. சமூகத் தொற்றைச் தவிர்க்கும் வகையில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும்படி கல்வித் துறையினருக்கு ஊக்கமூட்டப்பட்டது.
தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கான ஆதரவு கல்வித் துறையில் மிகவும் ஆக்ககரமாக இருக்கிறது என்று திரு வோங் தெரிவித்தார். ஊழியர்களில் சிலர் ஏற்கெனவே முதல் ஊசியைப் போட்டுக்கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
தங்களை மட்டுமின்றி மாணவர்களையும் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள அவர்கள் முன்வந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று அமைச்சர் நேற்று ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.
அத்தியாவசிய முன்கள சேவைகளில் ஈடுபட்டு இருப்போருக்குத் தடுப்பூசித் திட்டத்தை சிங்கப்பூர் நீட்டித்து இருக்கிறது. அதனையொட்டி ஆசிரியர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டி உள்ளது.
150,000 பேருக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்களுக்குத் தடுப்பூசி வாய்ப்பு கிடைக்கும் என்று கல்வி அமைச்சு இந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்தது.
தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கக்கல்லூரி, மில்லேனியா கல்வி நிலையம், சிறப்புக் கல்விப் பள்ளிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவற்றில் பணியாற்றுவோர் இவர்களில் அடங்குவர். குறிப்பிட்ட பாலர்பள்ளி ஊழியர்களுக்கும் தனியார் பள்ளி ஊழியர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும்.
கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவின் இரண்டு தலைவர்களில் ஒருவரான திரு வோங், ஊசி போட்டுக்கொண்ட கல்வித் துறையினர் சிலரின் அனுபவத்தையும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட கிராஞ்சி உயர்நிலைப்பள்ளி ஆசிரியரான டான் ஃபோங் வெய், உடலில் ஊசி போட்டுக் கொண்ட இடம் கொஞ்ச நேரத்திற்கு மரத்துப்போனதைப் போல் இருந்ததாகவும் மற்றபடி வேறுபாடு எதுவும் இல்லை என்றும் கூறினார்.
அதேபோல், மெரிடியன் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த ஒரு துறையின் தலைவரான ஹான் ஸி ரூய், தன் இரண்டு பிள்ளைகளையும் தன் பொறுப்பில் இருக்கும் மாணவர்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு காரணமாக தான் ஊசி போட்டுக்கொள்ள முடிவு செய்ததாகக் கூறினார்.

