சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 17 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். எல்லாருக்கும் தனிமையில் இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
புதிதாக கிருமி தொற்றியோரையும் சேர்த்து கொவிட்-19 தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 60,253 ஆகியது.
புதன்கிழமையன்று புதிதாக 15 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அவர்களில் சிங்கப்பூரர்களும் வேலை அனுமதிஉள்ளவர்களும் அடங்குவர்.
இந்தோனீசியா, பிரிட்டன், பங்ளாதேஷ், இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து அவர்கள் இங்கு வந்தவர்கள்.
அந்த 15 பேரில், 14 பேருக்கு கிருமி தொற்றிய அறிகுறி எதுவும் வெளியே தெரியவில்லை.
ஒருவருக்கு மட்டும் அறிகுறி தெரிந்தது. அனைவரும் தடுத்து வைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். சிங்கப்பூரில் கடந்த வாரத்தில் சமூகத்தொற்று யாருக்கும் இல்லாத நிலை ஏற்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.
புதன்கிழமை 15 பேர் குணமடைந்தனர். அவர்களையும் சேர்த்து 60,063 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள்.
இன்னமும் 25 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். யாரும் தீவிர கண்காணிப்பில் இல்லை. 103 பேர் நல்வாழ்வு நிலையங்களில் குணமடைந்து வருகிறார்கள். தொற்று காரணமாக மொத்தம் 30 பேர் மரணமடைந்துவிட்டனர்.

