தடுப்பூசி போட்டுக்கொள்ள மதரசா
ஊழியர்களுக்கு அழைப்பு
கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும்படி மதரசாக்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
மதரசாக்களைச் சேர்ந்த பலரும் புதன்கிழமை முதலாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாக சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) தெரிவித்தது.
அத்தியாவசிய சேவைகளைச் சேர்ந்தவர்களுக்குத் தடுப்பூசி வாய்ப்பை வழங்கும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக இது இடம்பெறுகிறது.
மாணவர்களுக்குத் தடுப்பூசி செயல்திட்டம் இப்போது நீட்டிக்கப்படவில்லை என்பதைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூரின் கல்வி நிலையங்களைப் பாதுகாப்பான நிலையில் வைத்திருப்பதும் இதன் நோக்கம்.
இதனிடையே, தடுப்பூசியின் முக்கியத்துவத்தை மதரசா ஊழியர்கள் புரிந்துகொண்டு இருப்பதாக முயிஸ் அமைப்பு தெரிவித்தது. தங்களையும் தங்கள் அன்பர்களையும் பாதுகாத்து தொற்று பரவும் வாய்ப்பைக் கூடுமானவரை தடுப்பூசி குறைத்துவிடும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிய முயிஸ் அமைப்பு, தகுதி உள்ள அனைவரும் தங்களுக்கு வாய்ப்பு வரும்போது அதை நன்கு பயன்படுத்திக்கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது.
சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி திட்டம் விவேகமாக, சரளமாக, கட்டம் கட்டமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. 45 வயது முதல் 59 வரை வயதுள்ள மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் வரையில் திட்டத்தை அரசாங்கம் விரிவுபடுத்தி இருக்கிறது.
பல்கலை விடுதியில்
யாருக்கும் தொற்று இல்லை
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக விடுதி ஒன்றைச் சேர்ந்த 438 பேருக்குச் சென்ற வாரம் கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களுடைய இருப்பிடத்தின் கழிவுநீரில் கிருமி தடயம் தெரியவந்ததை அடுத்து அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.
எல்லாருக்கும் கிருமித்தொற்று இல்லை என்பது தெரியவந்திருந்தது. ஒரே ஒரு முடிவு இன்னமும் வரவேண்டி இருக்கிறது என்று சுகாதார அமைச்சு புதன்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கை குறிப்பிட்டது.
கழிவுநீரில் தெரியவந்த கிருமி அறிகுறி, அந்தக் குடியிருப்பு இடத்தைச் சேர்ந்தவர்களிடையே முன்பு இடம்பெற்ற தொற்று காரணமாக ஏற்பட்டதாக இருக்கக் கூடும் என்று அமைச்சு தெரிவித்தது. யுடவுன் ரெசிடன்ஸ் நார்த் டவர் என்ற விடுதியிலிருந்து மார்ச் 20ஆம் தேதி சேகரிக்கப்பட்ட மாதிரி கழிவுநீரில் கிருமி தடயம் இருந்தது மார்ச் 21ல் தெரியவந்தது. அதனையடுத்து 13 குடியிருப்பு களைச் சேர்ந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். முடிவுகள் வரும் வரை அவர்கள் இணையம் மூலம் வகுப்புகளில் கலந்துகொண்டனர்.
அந்தப் பல்கலைக்கழகம் டிசம்பர் 7 முதல் தன்னுடைய விடுதிகள் அனைத்திலும் கழிவுநீர் கண்காணிப்புச் செயல்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களுக்குச் சுகாதார அமைச்சு சிறப்பு பரிசோதனைகளையும் நடத்தியது.
தடுப்பூசி கிடைப்பதில் இதுவரை பெரிய தடை எதுவும் இல்லை
கொவிட்-19 தடுப்பூசி ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் சிங்கப்பூருக்கு தடுப்பூசி வருவதில் இடையூறு எதுவும் இல்லை என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் புதன்கிழமை தெரிவித்தார்.
இருந்தாலும் கவலை நிலவி வருவதாக அவர் கூறினார். தடுப்பூசி தொடர்ந்து போதிய அளவுக்கு கிடைக்குமா என்பது முற்றிலும் நிச்சயமாகத் தெரியாததால் சங்கடமாக இருக்கிறது. கூடுமான வரை விரைவாக ஊசி போட்டுக் கொள்ளுங்கள் என்று சிங்கப்பூரர்களை ஊக்க மூட்ட இதுவே காரணம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
பிரிட்டனுக்கும் அதிகமாக தடுப்பூசி போடப்பட்டு வருகின்ற பகுதிகளுக்கும் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றுமதியை தடை செய்யக்கூடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரத்தை நீட்டிக்கப்போவதாக ஐரோப்பிய ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகி இருக்கின்றது.
ஃபைசர் நிறுவனம், தன்னுடைய உற்பத்தி ஆலையைத் தற்காலிகமாக மூடியிருந்த நேரத்தில் சிங்கப்பூருக்கு தடுப்பூசி வருவது சிறிது தடைபட்டது. இருந்தாலும் அந்த ஆலை மறுபடியும் செயல்படத் தொடங்கி இருப்பதால் ஊசி மருந்து விநியோகம் மீண்டும் தொடங்கி இருக்கிறது என்பதைத் திரு கான் சுட்டினார்.
ஊசி மருந்து வரத்து தடைபட்டால் சிங்கப்பூரின் தடுப்பூசி செயல்திட்டமும், மருந்து கிடைக்கும்வரை தற்காலிகமாக நிறுத்தப்படக்கூடும் என்று அவர் கூறினார். ஆகையால் பொதுமக்கள் இதைப் புரிந்துகொண்டு கூடுமான வரை விரைவாக தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

