கொவிட்-19 கொள்ளைநோய் சூழலில் தாங்கள் அதிக துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக பாதுகாவல் பணியில் ஈடுபட்டிருப்போர் தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும் நவம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வில் பங்கேற்ற 1,002 பாதுகாவலர்களில் ஐந்தில் இருவர் தாங்கள் ஏதாவதொரு வகையில் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக விளக்கினர்.
இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பங்கேற்ற 707 பாதுகாவலர்களில் மூன்றில் ஒருவர் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்துள்ளது.
இதுபற்றிக் கருத்துரைத்த பாதுகாவலர்கள் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் ஸ்டீவ் டான், பாதுகாவலர்கள் பெரும்பாலும் வசைபாடலுக்கு ஆளாகின்றனர் என்றார்.
இதற்கு ஒரு காரணம் கொவிட்-19 கொள்ளைநோய் சூழலில் பாதுகாப்பு தூர இடைவெளி நடவடிக்கைகளின் ஓர் அம்சமாக தாங்கள் கூடுதல் சோதனைகளை நடத்த வேண்டியிருந்ததை அவர் சுட்டினார். மேலும், தூர இடைவெளி விதிகளை கடைப்பிடிக்குமாறு தங்கள் முதலாளிகளிடம் இருந்து வந்த நெருக்குதுலும் காரணம் என அவர் கூறினார்.
"இதிலிருந்து தெளிவாகத் தெரிவது என்னவென்றால், பணியிடங்களில் பதற்றநிலை அதிகரித்துள்ளது என்பதுதான்," என அவர் தெரிவித்தார்.
பாதுகாவலர்களின் வேலையிட சூழல், அவர்களின் நலன், சம்பள பிரச்சினைகள் போன்வற்றை ஆராய்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வை சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகமும் பாதுகாவலர் சங்கமும் இணைந்து மேற்கொண்டன.
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் பதிவு பெற்றுள்ள சங்கமாக விளங்கும் இதில் 18,158 உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில் ஆகக் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 37.2 விழுக்காட்டினர் தாங்கள் வசைபாடலுக்கு ஆளாகியதாகக் கூறினர். மேலும் 4.8 விழுக்காட்டினர் தாங்கள் வசைமொழி, தாக்குதல் என இரு விதத்திலும் துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தெரிவித்தனர்.
"பாதுகாவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பது இதிலிருந்து தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது," என்றார் திரு டான்.
இதன் தொடர்பில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் உள்துறை அமைச்சின் அறிக்கையை திரு டான் சுட்டினார். அதில், பாதுகாவலர்களை துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க, தனியார் பாதுகாப்புத் துறை தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.
அத்துடன், இதுபோன்ற துன்புறுத்தல் சம்பவங்களை எதிர்கொள்ள சங்கம் ஒரு செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் விளக்கினார். அதன்மூலம் பாதுகாவலர்கள் தங்களுக்கு எதிரான துன்புறுத்தல், மற்ற பணி தொடர்பான குறைபாடுகளைக் கூறலாம் என திரு டான் தெரிவித்தார்.