வாடிக்கையாளருக்கு டிபிஎஸ் இலவச காப்புறுதி பாதுகாப்பு

வாடிக்கையாளருக்கு டிபிஎஸ் இலவச காப்புறுதி பாதுகாப்பு

2 mins read
f79dce90-0895-4095-9543-7a8e85df188f
-

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்டோருக்கு எதிர்­பாரா வித­மாக ஏதே­னும் பிரச்­சி­னை­கள் ஏற்பட்­டால் அதற்­குப் பாது­காப்பு கொடுக்­கும் நோக்­கத்­தில் டிபி­எஸ் வங்கி 'சப் இன்­சூ­ரன்ஸ்' என்ற நிறு­வ­னத்­து­டன் சேர்ந்து டிபி­எஸ்/ பிஓ­எஸ்பி வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இல­வச காப்­பு­றுதி பாது­காப்பை வழங்­கு­கிறது.

'கொவிட்-19 தடுப்­பூசி பாது­காப்பு' என்ற அந்­தத் திட்­டம் நேற்று தொடங்­கப்­பட்­டது. தடுப்­பூசி கார­ண­மாக அல்­லது கொவிட்-19 தொற்று கார­ண­மாக மருத்­து­வ­ம­னை­யில் இருக்­க­வேண்டிய நிலை ஏற்­பட்­டால் அல்லது தீவிர கண்­கா­ணிப்பு தேவைப்­பட்­டால் அந்தத் திட்­டம் கை கொடுத்து உதவும்.

மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்சை பெற நாளுக்கு $100 என்ற விகிதத்­தில் 14 நாட்­க­ளுக்­கும் தீவிர கண்­கா­ணிப்­புக்கு ஒரு நேர தொகை­யாக $1,000 என்ற கணக்­கி­லும் அத்­திட்­டம் செயல்­படும்.

எதிர்­பாரா மர­ணம் போன்ற நேரத்­தில் $10,000 உத­வித் தொகையை குடும்­பத்­தி­னர் பெறும் அம்­ச­மும் இந்த இரண்டு ஏற்­பாடு­களி­லும் உண்டு. 14 நாள் பாது­காப்­புத் திட்­டம் என்­பது, ஒவ்­வொரு முறை ஊசி போட்­டுக்­கொள்­ளும் தேதியன்று அல்லது 2021 டிசம்­பர் 31க்கு முன் தொடங்­கும்.

இரண்டு தடுப்­பூ­சி­களை அது உள்­ள­டக்­கும். அதே வேளை­யில், விண்­ணப்ப தேதி­யில் இருந்து 30 நாட்­க­ளுக்கு கொவிட்-19 பாது­காப்பு செல்­லு­ப­டி­யா­கும்.

18 வய­தும் அதற்கு அதிக வயதும் உள்ள சிங்­கப்­பூர்­வா­சி­கள் தடுப்­பூசி காப்­பு­றுதி பாது­காப்பு கேட்டு மார்ச் 25 முதல் ஏப்­ரல் 30 வரை நாடு முழு­வ­தும் உள்ள எந்த ஒரு டிபி­எஸ்- பிஓ­எஸ்பி வங்­கிக் கிளை­யி­லும் இணை­யம் வழி விண்­ணப்­பிக்­க­லாம். இருந்­தா­லும் முந்­தைய 14 நாட் களில் அவர்­கள் வெளி நாட்டுக்குச் செல்­லா­மல் இருந்­திருக்­க­வேண்­டும். தொற்று அறிகுறி அவர்­க­ளுக்கு இல்­லா­மல் இருந்­தி­ருக்­க­வேண்­டும்.

திட்­டத்­தில் சேர்­கை­யில், அவர்­களுக்கு பார்க்வே ஷென்­டன் அளிக்­கும் மருத்­து­வச் சேவை­களைப் பெறும் வாய்ப்­பும் கிட்­டும். இணையம் வழியிலான மருத்­துவ ஆலோசனை, கொவிட்-19 பரி­சோதனை, சுகாதாரப் பரி­சோதனை­கள் ஆகியவை இவற்­றில் அடங்கும்.

சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்­றும் இந்த வங்­கி­யின் 12,000 ஊழி­யர்­க­ளுக்­கும் கொவிட்-19 தடுப்­பூசி காப்­பு­றுதி பாது­காப்பு கிடைக்­கும்.