கரையோரத் தோட்டங்களுக்குச் செல்வோர் மேலும் மூன்று வார காலத்துக்கு, ஏப்ரல் 11ஆம் தேதி வரை ஹலோ கிட்டி- சக்குரா மலர்க் காட்சியைக் கண்டு ரசிக்கலாம்.
ஆண்டுதோறும் இடம்பெறும் இந்த மலர்க்காட்சி முன்னர் மொத்தம் மூன்று வார காலத்துக்கே இடம்பெற்றது.
ஆனால் மார்ச் 1 அன்று தொடங்கிய இந்த ஆண்டின் காட்சிக்கு ஐரோப்பாவிலிருந்து செர்ரி பூ மரங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது. கப்பல் துறையில் ஏற்பட்ட இடையூறுகள் இதற்குக் காரணம் என்று கரையோரத் தோட்டங்கள் நேற்று கூறியது.
திட்டமிட்டபடி ஜப்பானிலிருந்து சிறப்பு சக்குரா மரங்கள் வந்திருந்தன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐரோப்பாவிலிருந்து வந்த மரங்கள் பின்னர் காட்சியில் சேர்க்கப்பட்டதாக கரையோரத் தோட்டங்கள் கூறியது.
பார்வையாளர்கள் தோட்டத்தின் இணையப் பக்கம் மூலமாகவோ அல்லது விவேக தொலைபேசி செயலி மூலமாகவோ நேரம் குறிப்பிட்ட நுழைவுச் சீட்டுகளை வாங்க வேண்டும். சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் வழங்கிய $100 மின்னியல் சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலா பற்றுச்சீட்டைப் பயன்படுத்தலாம்.
ஹலோ கிட்டி - சக்குரா மலர்க் காட்சி அன்றாடம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மேல் விவரங்களுக்கு கரையோரத் தோட்டங்களின் ஃபேஸ்புக், டெலிகிராம் பக்கங்களில் காணலாம்.

