தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த இளம் வீரர்கள் பணத்துக்கும் சொகுசான வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். முழு ஆற்றலையும் வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுவதில்லை என்று சிங்கப்பூர் பார்வையாளர்களிடம் நேற்று பேசிய ஜோஸ் மொரின் யோ தெரிவித்தார்.
'ஸ்பர்ஸ்' காற்பந்து குழுவின் ஆதரவாளரும் காப்புறுதி நிறுவனமுமான 'ஏஐஏ' ஏற்பாடு செய்த 'Game On with Mourinho' மெய்நிகர் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
மனநலம், காற்பந்து விளையாட்டை சிங்கப்பூரர்கள் வாழ்க்கைத் தொழிலாக மாற்றிக்கொள்வது தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் இளம் வீரர்கள், தலைமை பயிற்றுவிப்பாளர் பிலிப் ஆவ் மற்றும் விளையாட்டாளர் ஹேரிஸ் ஸ்டுவர்ட் உட்பட பலர் பங்கேற்றனர்.
காற்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள இளையர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு "காற்பந்தை உண்மையிலேயே நேசிக்க வேண்டும். அதைப் பற்றியே கனவு காண வேண்டும். காற்பந்து உங்களுக்கு என்ன கொடுக்கும் என்பது பற்றி கனவு காணக் கூடாது," என்று ஸ்பர்ஸ் நிர்வாகி மொரின்யோ குறிப்பிட்டார்.
"பெரும்பாலான புதிய விளையாட்டாளர்கள் காற்பந்து மூலம் கிடைக்கும் பணம், சொகுசான வாழ்க்கையில் ஆர்வம் காட்டு கின்றனர். இது, உண்மையான ஊக்கமல்ல.
"ஸ்லாட்டான் இப்ராஹிமோவிச், 39, போன்ற பழைய விளையாட்டாளர்கள் இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் காற்பந்தை நேசிக்கின்றனர்.
"உங்களுக்கு 12 வயதாகும்போது ஒவ்வொரு கணமும் பயிற்சியை நேசிக்க வேண்டும். முன்னணி வீரர்களின் விளையாட்டைப் பார்த்து கவனிக்க வேண்டும். இதுதான் செய்ய வேண்டிய முக்கியமான வேலை," என்று மொரின்யோ மேலும் கூறினார்.
இளம் வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும்போது தாம் எதிர்கொண்ட சில சிரமங்களையும் போர்ச்சுக்கீசியரான 58 வயது மொரின்யோ பகிர்ந்து கொண் டார்.
விளையாட்டாளர்களை ஊக்கப்படுத்த எப்படி பயிற்சியளிக்கிறீர்கள் என்றும் அவரிடம் கேட்கப்பட்டது.
"நான் பயிற்சியளிப்பதாக நம்பவில்லை. இது, தொடரும் நிகழ்வுகள். சில பாடங்களை எடுப்பதுபோல் இதுவல்ல," என்று மொரின்யோ சொன்னார்.