சிங்கப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட சொகுசு தனியார் அடுக்குமாடி வீடுகள் மொத்தம் $300 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளன. எண் 2 டிரேகாட் பார்க்கில் உள்ள அந்த கொண்டோமினியத்தில் மொத்தம் 20 வீடுகள் உள்ளன.
ஸ்வையர் புரோப்பர்ட்டிஸ் ஆஃப் ஹாங்காங் நிறுவனத்திற்குச் சொந்தமான 'ஈடன்' சொகுசு கொண்டோமினியத்தின் 20 வீடுகளும் கிட்டத்தட்ட $300 மில்லியனுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டன என்று தி பிசினஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
அந்த பரிவர்த்தனையின் விவரங்கள் தெரியவில்லை. அந்த வீடுகள் அனைத்தையும் வாங்கியவர் ஒருவரா அல்லது பலரா என்பதும் தெரியவில்லை ஆனால் அந்த பரிவர்த்தனை செய்தவர் (அல்லது செய்தவர்கள்) வடக்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது.
சவில்ஸ் நிறுவனத்துடன் இணைந்த இயாப் அமைப்பின் சான்ட்ரா இயாப் இந்த தனியார் பரிவர்த்தனையை நடத்தியுள்ளார் என்றும் தெரியவருகிறது. தி பிசினஸ் டைம்ஸ் நாளிதழ் விசாரித்ததற்கு ஹட்டன்ஸ் நிறுவனம் கருத்துரைக்க மறுத்துவிட்டது.
மேற்கண்ட பரிவர்த்தனையின் மூலம் சராசரியாக ஒரு சதுர அடி கிட்டத்தட்ட $4,900க்கு விலை போய் உள்ளது.
அந்த சொகுசு குடியிருப்பில் உள்ள 20 வீடுகள் ஒவ்வொன்றும் 4 அறை வீடுகள். ஒரு மாடியில் ஒரு வீடு என்று மூன்றாம் மாடியில் இருந்து 22ஆம் மாடி வரை அந்த 20 வீடுகளும் இடம்ெபற்றுள்ளன.
ஒவ்வொரு வீடும் கிட்டத்தட்ட 3,035 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த 22 மாடி கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டு முடிவடைந்தன. அதில் ஒரு நீச்சல் குளம், சிறுவர் நீச்சல் குளம், பூங்கா, மொட்டை மாடி பூங்கா போன்ற வசதிகள் உள்ளன.

