குறுக்கு ரயில் பாதையில் ஹவ்காங் சந்திப்பு நிலையமும் அதற்கான சுரங்கப் பாதைகளும் $604 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ளன.
அதற்கான ஒப்பந்தத்தை தென்கொரியாவின் 'சாம்சுங் சி & டி கார்ப்பரேஷன்' நிறுவனத்திற்கு நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று வழங்கியது. அதற்கான பணிகள் இவ்வாண்டின் இறுதிக் காலாண்டில் தொடங்கப்பட வேண்டும் என்று ஆணையம் தெரிவித்தது.
வரும் 2030ஆம் ஆண்டிலிருந்து குறுக்கு ரயில் பாதை செயல்பாட்டிற்கு வரவுள்ளது. அதன் முதல் கட்டத்தில் ஹவ்காங் சந்திப்பு நிலையம் அமையவிருக்கிறது. விமானப் பூங்காவில் இருந்து பிரைட் ஹில் வரை குறுக்கு ரயில் பாதையின் முதல் கட்டம் அமையும். அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் கோரப்பட்டு, ஒப்பந்தங்கள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன.
ஹவ்காங் சந்திப்பு நிலையத்தின் வடிவமைப்பு, கட்டுமானம், இப்போது வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் அமைந்துள்ள ஹவ்காங் நிலையத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் ஆகிய பணிகளை சாம்சுங் சி&டி நிறுவனம் மேற்கொள்ளும். ஹவ்காங் நிலையத்தையும் அந்த நிறுவனமே கட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் கால்டிகாட், மரின் பரேட் நிலையங்களையும் டௌன்டவுன் தடத்தில் ஸிலின் நிலையத்தையும் சாம்சுங் சி&டி நிறுவனம் அமைத்து வருகிறது. வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் கோவன், டௌன்டவுன் பாதையில் எக்ஸ்போ, அப்பர் சாங்கி ஆகிய நிலையங்களையும் அந்நிறுவனமே அமைத்தது.
குறுக்கு ரயில் பாதை, சிங்கப்பூர் எட்டாவது 'எம்ஆர்டி' ரயில் பாதை. ஜூரோங் லேக் வட்டாரம், பொங்கோல் மின்னிலக்க வட்டாரம், சாங்கி ஆகிய முக்கிய பகுதிகளை அந்த ரயில் பாதை இணைக்கும். அப்பாதையில் அமையும் நிலையங்களில் கிட்டத்தட்ட பாதி நிலையங்கள், மற்ற ரயில் பாதைகளுடன் சந்திப்பு நிலையங்களைக் கொண்டிருக்கும்.