நியாயமான குத்தகை நடைமுறைகள் மற்றும் ஒப்பந்த விதிமுறைகளுக்கான தொழில் நியதிகளை நிறுவுவதற்காக கட்டட உரிமையாளர்களும் குத்தகைதாரர்களும் அடங்கிய குழு, புதிய நடத்தை விதித் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறது.
கட்டட உரிமையாளர்களும் குத்தகைதாரர்களும் அந்த நடத்தை விதிகளுக்கு இணங்கி நடக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று நியாயமான குத்தகைக்கான தற்காலிகக் குழு, அரசாங்கத்திற்குப் பரிந்துரைத்துள்ளது என்று அக்குழுவின் தலைவர் மைக்கல் லிம் சூ சான் ஓர் ஊடகக் கருத்தரங்கின்போது தெரிவித்தார்.
வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங்கும் செய்தியாளர் சந்திப்பின்போது அதனை உறுதிப்படுத்தினார்.
குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஆதரிக்கிறது என்றும் அதன் தொடர்பில் அடுத்த சில மாதங்களில் உரிய பங்காளிகளுடன் அரசாங்கம் அணுக்கமாகப் பணியாற்றும் என்றும் திருவாட்டி லோ கூறினார்.
இதனிடையே, வரும் ஜூன் 1ஆம் தேதியில் இருந்து அந்த நடத்தை விதிகளை ஏற்று, இணங்கி நடக்கக் கடப்பாடு கொண்டுள்ளதாகக் குழுவின் 18 உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
அத்துடன், சில்லறை விற்பனை, உணவு, பானம், வாழ்க்கைபாணி ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் அவ்வழிகாட்டி நெறிமுறைகளுக்கு இணங்கி நடக்கும்படி ஊக்குவிக்கப் போவதாகவும் அவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
அந்நடத்தை விதிகளுக்கு இணங்கி நடப்பதைக் கண்காணிப்பதற்காக ஜூன் 1ஆம் தேதி ஒரு நியாயமான குத்தகைத் தொழிற்குழு அமைக்கப்படும்.
நடத்தை விதித் தொகுப்பின் காப்பாளராக அக்குழு செயல்படும் என்றும் தேவைப்படின் அவ்வப்போது மேம்படுத்தபடும் என்றும் திரு லிம் சொன்னார்.
இவ்வாண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் அல்லது அதற்குப் பிறகு, ஓராண்டிற்கும் அதிக காலத்திற்கான குத்தகையின்கீழ் வரும் அனைத்து சில்லறை விற்பனை வளாகங்களுக்கும் இந்த நடத்தை விதித் தொகுப்பு பொருந்தும்.
நடத்தை விதித் தொகுப்பையும் அது சார்ந்த மற்ற விவரங்களையும் சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனத்தின் இணையத்தளத்தில் காணலாம்.

