கட்டட, விநியோக ஒப்பந்தங்கள் தொடர்பில் கட்டுமான நிறுவனங்களுக்கு மேலும் ஆறு மாத காலத்திற்கு சட்ட, அமலாக்க நடவடிக்கைகளில் இருந்து தளர்வு அளிக்கப்படவுள்ளது.
இடர்தணிப்புக் காலத்தை இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்க அனுமதிக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் முன்வைக்கப்படும் என தேசிய வளர்ச்சி அமைச்சு நேற்று தெரிவித்தது.
நடப்பிலுள்ள இடர்தணிப்புக் காலம் இம்மாதத்துடன் முடிவடைய இருக்கிறது.
அடுத்த மாதம் 5ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) (சட்டத்திருத்தம் 2) மசோதா 2021 தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
"இடர்தணிப்புக் காலத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகள் தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை இணக்கமான முறையிலும் இருதரப்பிற்கும் பலனளிக்கும் விதத்திலும் பேசித் தீர்த்துக்கொள்ளும்படி ஊக்குவிக்கப்படுகின்றன," என்று அமைச்சு கூறியுள்ளது.
அம்மசோதா நிறைவேற்றப்பட்டால், வாங்குவதற்கான விருப்புரிமை, விற்றல்-வாங்குதல் உடன்பாடுகள் ஆகியவற்றுக்கான இடர்தணிப்புக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்.
"குடியிருப்பு, வர்த்தக, தொழில்சார் சொத்துகளை வாங்குவோரிடத்தில், பணம் செலுத்த கூடுதல் காலம் தேவைப்படுவோருக்கு இந்த நீட்டிப்பு கைகொடுக்கும்," என்று அமைச்சு தெரிவித்தது.
சொத்து மேம்பாட்டாளர்களும் வாங்குவோரும் தங்களது ஒப்பந்தக் கடப்பாடுகளை நிறைவேற்ற முடியாமல் போகுமெனில், பேச்சுவார்த்தை மூலம் இணக்கத் தீர்வை எட்ட ஊக்குவிக்கப்படுகின்றனர்.
சொத்துச் சந்தை, சுற்றுப்புற சேவைகள், பாதுகாவல் போன்றவற்றை உள்ளடக்கிய மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் தொழில்துறை கொரோனா நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கிவிட்டபோதும் அத்துறையின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலை நீடிப்பதாகவும் நிறுவனங்களுக்கான சவால்கள் தொடர்வதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள் வரத்து தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக ஊதியம் போன்ற ஊழியர் தொடர்பான செலவுகளும் அதிகரித்துவிட்டதை அமைச்சு ஒத்துக்கொண்டது.
பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்க வேண்டியிருப்பதால் குறைவான ஊழியர்களுடன் செயல்படும் நிலைக்கும் நிறுவனங்கள் தள்ளப்பட்டன.
$1.36 பில்லியன் மதிப்பிலான கட்டுமானத் துறை ஆதரவுத் தொகுப்பு, மனிதவள ஆதரவு, சட்டரீதியாக நிவாரணம் எனப் பல வழிகளிலும் ஆதரவு வழங்கி வரும் அரசாங்கம், அது மேலும் தொடரும் எனத் தெரிவித்துள்ளது.

