கட்டுமானத் திட்டங்கள்: ஒருங்கிணைந்து செயல்பட புதிய மின்னிலக்கத் தளம்
கட்டடக் கலைஞர்கள், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், கட்டமைப்பாளர்கள் ஆகியோர் இப்போது புதியதோர் ஒருங்கிணைந்த தளம் மூலம் தங்களது கட்டுமானத் திட்டங்கள் தொடர்பில் மின்னிலக்க முறையில் இணைந்து பணியாற்றலாம். கட்டுமானப் பணிகள் தொடர்பான அனைத்துப் பங்காளிகளும் 'தி ஹபல் பிளாட்ஃபார்ம்' எனும் அத்தளம் மூலம் வடிவமைக்கவும் கட்டமைக்கவும் நிர்வகிக்கவும் நிகழ்நேரத்தில் கட்டுமானத் தளங்களைக் கண்காணிக்கவும் முடியும். இணையவழிச் சேவையக அடிப்படையிலான இந்தத் தளத்தில் இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட நிறுவனங்கள் பதிவுசெய்து கொண்டுள்ளன. சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட 15,000 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். 'ஹபல்' தளத்தை உருவாக்க 18 மாதங்கள் ஆனதாகக் குறிப்பிட்ட 'ஹபல்' இணை நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான லின் ஷிஜிங், புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு, அத்தளம் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் என்றும் சொன்னார். கட்டட, கட்டுமான ஆணையமும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவும் இணைநிதியும் அளித்துள்ளன. 'ஹபல்' தளத்தைப் பயன்படுத்தி, இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட வளர்ச்சி, உருமாற்றத் திட்டத்தில் நிறுவனங்கள் பங்கேற்கலாம். அத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் முதல் தொழில்துறை கட்டுமானத் துறை என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத சூதாட்டக் கும்பல்: ஆடவர் அறுவர் மீது குற்றச்சாட்டு
சட்டவிரோத சூதாட்டக் கும்பலுடன் ஈடுபாடு கொண்டதாகக் கூறி ஆடவர் அறுவர் மீது நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சுமத்தப்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபரில் குற்றக் கும்பல்களைக் குறிவைத்து தீவு முழுவதும் போலிஸ் நடத்திய அதிரடி சோதனைகளில் கைதான 66 பேரில் அந்த அறுவரும் அடங்குவர். முக் யுவென் செங், 49, யோங் சீ சம், 63, ஆவ் செக் ஹுவாட், 53, டான் பெங் சீ, 45, டான் லெய் பெங், 34, ஸ்டீவன் ஃபூ கீ மெங், 40, எனும் அந்த அறுவரும் சட்டவிரோத ஓர் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீதான வழக்குகள் ஏப்ரல் 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
$418,000 கொள்ளை: ஆடவருக்கு ஆறாண்டிற்கு மேல் சிறை விதிப்பு
திட்டமிட்டு $418,000 பணத்தைக் கொள்ளையடித்ததற்காக ஆடவருக்கு ஆறாண்டுகளும் பத்து மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நிலையில், ஒரு மோசடிக் குற்றச்சாட்டையும் இரு வேறு தாக்குதல் குற்றச்சாட்டுகளையும் ஜோஷுவா ஜான் ஃபூ குவோ லீ எனும் அந்த ஆடவர் கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அத்துடன், தன் மீதான ஒரு மிரட்டல் குற்றச்சாட்டையும் போதைப்பொருள் தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டார். கடந்த 2019ஆம் ஆண்டு எர்னஸ்ட் லியோங் ஸாங் ஷெங், 28, என்பவருடன் இணைந்து, ஃபூ அந்தத் திட்டமிட்ட கொள்ளைச் சம்பவத்தில் பங்கெடுத்தார். அதற்காக அவருக்கு $50,000 வெகுமதியாகக் கிடைத்தது.
ஊழியரை முடமாக்கிய விபத்து; மேற்பார்வையாளருக்குச் சிறை
பணியிடத்தில் நிகழ்ந்த விபத்தால் ஊழியர் ஒருவரின் இடுப்பிற்குக் கீழுள்ள அனைத்து உறுப்புகளும் செயல்படாமல் போயின. அவ்விபத்தின்போது மேற்பார்வையாளராகப் பணியாற்றியவருக்கு ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அப்போது 'லுவா சான் மின்னியல், கட்டுமான ஒப்பந்ததாரர்கள்' நிறுவனத்தில் பணியாறிய லுவா ஹுவா கியோங், 66, எனும் அவர், திரு யே கோ கோ உள்ளிட்ட தம் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கவனக்குறைவுடன் நடந்துகொண்டதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். கடந்த 2018 பிப்ரவரி 3ஆம் தேதி, அங் மோ கியோவில் உள்ள ஒரு திடலில் குவிமாட வடிவிலான கூடாரத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்விபத்து நிகழ்ந்தது. விபத்தில் காயமுற்ற திரு யே, சுயநினைவற்ற நிலையில் டான் டோக் செங் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக திரு யேயின் உடலில் இடுப்பிற்குக் கீழுள்ள பகுதிகள் செயல்படாமல் போயின என்றும் கைகள் பலவீனமடைந்தன என்றும் நீதிமன்ற ஆவணங்கள் கூறின. இப்போது அவர் சக்கர நாற்காலியின் துணையுடன் நடமாடி வருகிறார்.

