சிங்கப்பூரில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நடைமுறை அடுத்த மாதம் 5 ஆம் தேதி முதல் மாற்றம் காண்கிறது. வீட்டிலிருந்து வேலை பார்க்கக்கூடிய அரசாங்க ஊழியர்கள், பொதுவான வழிகாட்டி நெறிமுறையின்படி, வாரம் ஐந்து நாட்களில் மூன்று நாட்கள் அலுவலகத்திற்குச் சென்று வேலை பார்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்று கட்டுக்குள் வருவதால் கொவிட்-19 கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் தளர்த்தப்படும் என்று சென்ற வாரம் சிறப்புப் பணிக்குழு அறிவித்தது.
இந்த நிலையில் ஏப்ரல் 5க்கு பிறகு வாரம் இரு நாட்களுக்கும் அதிக நாட்கள் வீட்டிலேயே இருந்து வேலை பார்க்க அனுமதி கிடைத்தால் அரசு அதிகாரிகள் அவ்வாறே செய்யலாம் என்று அரசாங்கத் தேர்வாணையம் தெரிவித்ததாக சண்டே டைம்ஸ் குறிப்பிட்டது.
பல அரசு அதிகாரிகளைப் பொறுத்தவரை பிரிந்து குழுக்களாக வேலை பார்க்கும் ஏற்பாடுகளும் இனி கட்டாயமில்லை.
உச்சநேரங்களில் பொதுப் போக்குவரத்தில் பயணத்தைக் குறைத்துக் கொள்ளும் வகையில், மாற்று வேலை நேரத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் நேரடியாகவும் இணையம் மூலமாகவும் வேலைபார்க்கும் ஏற்பாட்டை கடைப்பிடிக்கலாம் என்றும் முதலாளி களுக்கு ஊக்கமூட்டப்படுகிறது.
சிங்கப்பூரில் 16 அமைச்சுகளிலும் 50க்கும் மேற்பட்ட வாரியங்களிலும் ஏறத்தாழ 153,000 அதிகாரிகள் வேலை பார்க்கிறார்கள்.
இதனிடையே, மேலும் பல ஊழியர்கள் வேலை இடத்திற்குத் திரும்புவதை தனியார் துறை வர வேற்பதாக சிங்கப்பூர் தொழில்துறை சம்மேளனமும் சிறிய, நடுத்தர நிறு வனங்கள் சங்கமும் தெரிவித்தன.
இருந்தாலும் அலுவலகத்திற்கு ஊழியர்கள் திரும்புவார்கள் என்று எதிர்பார்த்து இருக்கும் நிறுவனங்களுக்குச் சில இடையூறுகளும் இருக்கும் என்று தெரிகிறது.
சண்டே டைம்ஸ் 2,600 பேரை உள்ளடக்கி ஓர் ஆய்வு நடத்தியது.
பகுதிநேர அடிப்படையில் கூட வேலையிடத்துக்குத் திரும்ப விரும்பவில்லை என்று நான்கு ஊழியர்களில் மூன்று பேர் தெரிவித்ததாக அந்த ஆய்வு கூறுகிறது.
இதனிடையே, தேவைப்பட்டால் நிறுவனத்தின் மனிதவள கொள்கைகளையொட்டி ஊழியர்கள் அலுவலகத்துக்குத் திரும்ப வேண்டும் என்று சிங்கப்பூர் மனிதவளப் பயிலகத்தின் நிர்வாக இயக்குநர் ஆல்வின் கோ கூறுகிறார்.
இவ்வேளையில், அதிகம் பேர் வேலைக்குத் திரும்புவார்கள் என்பதால் உடல்நிலை சரியில்லாதவர்கள் பொதுப் போக்குவரத்தை தவிர்த்துவிட வேண்டும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் பயணிகளுக்கு ஆலோசனை கூறியது.
பேசுவதையும் பயணிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய இந்த ஆணையம், வேலை நேரத்தை மாற்றி அமைத்துக்கொள்ளும்படி முதலாளிகளைக் கேட்டுக்கொண்டது.
இருந்தாலும் இத்தகைய ஏற்பாடு குறிப்பிடத்தக்க பலனை ஏற்படுத்தும் வாய்ப்பு இல்லை என்று போக்கு வரத்து பொருளியல் வல்லுநர் வால்டர் தெசிரா கூறுகிறார்.

