பெண்களுக்கு வேலைச் சந்தை
பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை விளம்பரப்படுத்தும் வேலைச் சந்தை ஏப்ரல் 8ஆம் தேதி வரை இணையம் வழி நடக்கிறது. என்டியுசியின் மாதர், குடும்பப் பிரிவு, வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம், பொங்கோல் ேஷார் டிவிஷன் ஆகியவை சேர்ந்து ஏற்பாடு செய்துள்ள 'வாழ்க்கைத் தொழில் விருப்ப உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் சந்தை' என்ற அந்தச் சந்தை, பொங்கோலில் உள்ள ஒயாசிஸ் டெர்ரஸ் என்ற கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.
அதில் 200க்கும் அதிக வேலைகளை முதலாளிகள் முன்வைத்தனர். ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆலோசனை பயிலரங்குகளும் சந்தையில் இடம்பெற்று இருந்தன.
ஆர்வமுள்ளவர்கள் https://info.findjobs.com.sg/vcf/necdc-jobfair-mar-2021/ முகவரியில் பதியலாம்.
கொவிட்-19 தடுப்பூசி மருந்து விரயமாவது ஆகக் குறைவு
சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி மருந்து விரயமாவது ஆகக் குறைவாக இருக்கிறது. தடுப்பூசி செயல்திட்டம் வேகமாகும் நிலையில் அதை போட்டுக்கொள்வோர் விகிதம் முன்பதிவு மூலமாக மிகக் கவனமாகக் கண்காணிக்கப்படுகிறது.
இந்தக் கண்காணிப்பு மூலம், தேவைக்கேற்ப முன்ன தாகவே திட்டமிடப்பட்டு, ஊசி போடப்படும் இடத்திற்குத் தடுப்பூசி மருந்து சென்று சேர்வது உறுதிப்படுத்தப்படுகிறது என்று சுகாதார அமைச்சு கூறியதாக சேனல் நியூஸ் ஏஷியா நேற்று தெரிவித்தது. போடப்படாமல் தடுப்பூசி கைவசம் இருந்தால் முன்பே அட்டவணையில் இடம்பெற்று இருப்போருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களுக்கு அந்த ஊசி போடப்படும் என்று அமைச்சு விளக்கியது.
தீவிர நடவடிக்கைகள்
சிங்கப்பூரில் வேகக் கட்டுப்பாட்டை மீறி வாகனங்களில் செல்வோரையும் சட்டவிரோதமாக வாகனங்களில் மாற்றங்களைச் செய்வோரையும் மடக்கிப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளைப் போக்குவரத்து போலிசும் நிலப் போக்கு வரத்து ஆணையமும் வேகப்படுத்தி இருக்கின்றன.
அந்த இரண்டு அமைப்புகளும் ஒருவார காலம் எடுத்த நடவடிக்கைகளில் 71 பேருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப் பட்டது. குறிப்பிடத்தக்க இடங்களில் வழக்கமாக தாங்கள் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக போக்கு வரத்து போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
குறைந்த வருவாய் ஊழியர் வாழ்க்கை மேம்பட பயிலரங்கு
குறைந்த வருவாய் ஊழியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் யோசனைகளை ஒன்றுதிரட்டுவதற்காக நடத்தப்படுகின்ற ஆறு பயிலரங்குகளில் முதலாவது பயிலரங்கு டோபி காட்டில் உள்ள தெமாசெக் ஷாப் ஹவுசில் நேற்று நடந்தது. மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மதும் அதில் கலந்துகொண்டார்.
குறைந்த வருவாய் ஊழியர்களுக்கான செயல் கூட்டணி என்ற அமைப்பின்கீழ் அவை அடுத்த சில மாதங்களில் நடக்கும்.
சிங்கப்பூரில் குறைந்த வருமான ஊழியர்களைக் கைதூக்கிவிட தேவைப்படும் அடிப்படை நடவடிக்கைகள் இடம்பெற அவை வழிவகுக்கும்.

