15 கி.மீ. காட்டு உலாவழி: 10 ஆண்டுகளில் தயாராகும்

15 கி.மீ. காட்டு உலாவழி: 10 ஆண்டுகளில் தயாராகும்

2 mins read
577c2450-4451-4620-8a55-98bf7eb0b6c5
ஆரோன் லீ, 20, என்ற பட்டக் கல்வி மாணவர், விளையாட்டு கோபுரத்தின் 3வது, 4வது மாடியில் இருந்து உருளைக் குழாய் ஒன்றின் வழியாக சறுக்கி வருகிறார்.அங்குள்ள இரு குழாய்களும் 7.3 மீ. மற்றும் 11.9 மீ. நீள மானவை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா நெடுகிலும் அமையும்; இயற்கையோடு இணைந்து வாழ வகை செய்யும்

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா முழு­வ­தும் நீண்டு செல்­லும் வகை­யில் 15 கி.மீ. காட்டு உலாவழி இன்­னும் 10 ஆண்­டு­களில் அமைய இருக்­கிறது. அப்பாதை கிழக்குக் கரை­யோர தோட்­டங்­களில் தொடங்கி சாங்கி நோக்­கிச் செல்­லும்.

குடி­யி­ருப்­பா­ளர்­கள், பார்­வை­யாளர்­கள் உள்ளிட்ட மக்கள் இயற்கை­யு­டன் இணைந்து வாழ அந்­தப் பாதை வழிவகுக்­கும்.

சிகிச்­சைத் தோட்­டங்­கள், இயற்கை விளை­யாட்­டுக் கூடங்கள், பூங்­கா­வில் இருக்­கும் பல காட்­டுப் பகுதி­கள் ஆகி­ய­வற்றை அந்­தப் புதிய பாதை இணைக்­கும் என்று தேசிய பூங்­காக் கழ­கம் நேற்று அறி­வித்­தது.

கடந்த சில ஆண்­டு­களில் சீர­மைக்­கப்­பட்டு மேம்­ப­டுத்தப்பட்டு உள்ள 'பிக் ஸ்பி­ளாஷ்' இடம், முன்­னாள் 'கோல்ட்­கிஸ்ட் குடில்­கள்' ஆகி­யவை உள்­ளிட்ட பூங்­கா­வின் பகு­தி­க­ளை­யும் அந்­தப் பாதை இணைக்­கும்.

காலப்­போக்­கில் சாத்­தி­ய­மான இடங்­களில் மக்­க­ளுக்­குப் புதிய பாதை­களை உரு­வாக்கி இயற்­கை­யு­டன் அவர்­களை இணைக்க வேண்­டும் என்­ப­தைச் சாதிக்­கவே விரும்­பு­கி­றோம் என்று கழ­கத்­தின் இயக்­கு­நர் டான் ஜுன் சாவ் நேற்று நடந்த மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

ஆண்­டுக்கு 7.5 மில்­லி­யன் வரு­கை­யா­ளர்­களை ஈர்க்­கும் சிங்­கப்­பூ­ரின் ஆகப்­பெ­ரிய, மிக­வும் பிர­ப­ல­மான ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா இன்­ன­மும் நக­ரப் பூங்கா என்றே கரு­தப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார். அதன் அனு­ப­வமே வேறு­பட்­ட­தாக இருக்­கும் என்­றார் அவர்.

இத­னி­டையே, புதி­தாக உரு­வாக்­கப்­பட்­டுள்ள 'கோஸ்­டல் பிளே­கு­ரோவ்' என்ற விளை­யாட்டு இட­மும் நேற்று அதி­காரபூர்­வ­மா­கத் திறக்­கப்­பட்­டது. ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்­சர் கோ சோக் டோங், தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, மவுண்ட்­பேட்­டன் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லிம் பியாவ் சுவான் ஆகி­யோர் அங்கு மரம் ஒன்றை நட்டு அதைத் திறந்து வைத்­த­னர்.

அந்த இடம், ஈஸ்ட் கோஸ்ட் பூங்­கா­வில் 'பிக் ஸ்பிளாஷ்' இருந்த இடத்­தில் 4.4 ஹெக்­டர் பரப்­பளவில் அமைந்­துள்­ளது. அங்கு குடும் பங்கள் மகிழ்ச்சியான பொழுதைக் கழிக்கும் வகையில் புது­மை­யான பல விளை­யாட்டு அனு­பவங்­களைத் தரக்­கூ­டிய வச­தி­கள் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளன.